மேற்கு எத்தியோப்பிய கிராமம் ஒன்றில் அடையாளம் தெரியாத தாக்குதல்தாரிகளால் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் 30 க்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்த மருத்துவமனையின் தாதி ஒருவர் பி.பி.சி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
சிலர் துப்பாக்கியால் சுடப்பட்டும் மேலும் சிலர் கத்தியால் குத்தப்பட்டும் இருப்பதாக அந்தத் தாதி குறிப்பிட்டார்.
பிரதமர் அபிய் அஹமது வருகை தந்து ஒரு தினத்திற்கு பின்னர் கடந்த புதன்கிழமை பனிசங்குல் - குமுஸ் பிராந்தியத்தில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பல்லினத்தவர்கள் வாழும் பினோஜி கிராமத்தில் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக எத்தியோப்பிய மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சூரியோதயத்திற்கு முன்னர் இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஆணைக்குழு தெரிவித்தது.
இந்தத் தாக்குதலை அமைதிக்கு எதிரான செயல் என்று மாநில அரசின் பேச்சாளர் பெயேன் மெலெஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்தப் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் அபிய், பிராந்தியத்தில் இனரீதியான வன்முறைகள் அண்மைய மாதங்களில் அதிகரித்திருப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
‘இன மற்றும் மத அடிப்படையில் எத்தியோப்பியர்களை பிரிக்கும் எதிரியின் நோக்கம் தொடர்ந்தும் இருந்து வருகிறது’ என்று பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘இந்த நோக்கம் நிறைவேறாது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பனிசங்குல் - குமுஸ் பிராந்தியத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நான்கு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கடந்த நவம்பர் மாதத்தில் பஸ் பயணிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 34 பேர் கொல்லப்பட்டனர்.
எனினும் வடக்கு டைக்ரே பிராந்தியத்தில் அரச படை நடத்திய போர் நடவடிக்கையுடன் இந்த வன்முறைகளுக்கு தொடர்பில்லை என்று கூறப்படுகிறது.
அந்தப் போரினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதோடு சுமார் 50,000 மக்கள் அண்டை நாடான சூடானில் தஞ்சம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment