விக்டோரியா அணைக்கட்டின் ஸ்திரத்தன்மை 100 வீதம் உறுதி - இலங்கைக்கு வருகை தரவுள்ள நிபுணர்கள் குழு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

விக்டோரியா அணைக்கட்டின் ஸ்திரத்தன்மை 100 வீதம் உறுதி - இலங்கைக்கு வருகை தரவுள்ள நிபுணர்கள் குழு

சர்வதேச தரத்திற்கு ஏற்ப பராமரிக்கப்பட்டு வரும் விக்டோரியா அணைக்கட்டின் ஸ்திரத்தன்மையை ஆராய நிபுணர்கள் குழு அடுத்த ஆண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும், அதற்குத் தேவையான அனைத்து திட்டப் பணிகளும் தற்பொழுது முடிவடைந்துள்ளதாகவும் மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள், குடியிருப்புக்கள் மற்றும் பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார்.

நவீன உபகரண செயற்பாடுகள் மூலம் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரசபையின் தொழில்நுட்பம் தொடர்புடைய விசேட அதிகாரிகள் அணைக்கட்டின் ஸ்திரத்தன்மை குறித்து, 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் அண்மையில் பல பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அணை பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

விக்டோரியா அணைக்கட்டின் கண்காணிப்பு தொடர்பில் அமைச்சர் உள்ளடங்கிய குழு ஸ்தலத்திற்கான கள சுற்றுப்பயணத்தில் அண்மையில் ஈடுபட்டது. அதன் பின்னர் பொல்கொல்லை மகாவலி அதிகார சபை அலுவலகத்தில் கடந்த 19ம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இந்தத் தகவலை தெரிவித்தார்.

மேலும் அணையில் நிறுவப்பட்ட உபகரணத்தின் உதவியுடன் நில அதிர்வுக்கான அளவுகள், அணையின் செயற்பாடுகள் மற்றும் நிலத்தின் தன்மைகள் குறித்த தகவல்களைப் பெற முடிகின்றது.

அதிநவீன உபகரணங்கள் மற்றும் விஞ்ஞான முறையைப் பயன்படுத்தி விசேட பொறியியலாளர்கள், மத்திய அதிகாரசபையின் தொழில்நுட்ப அதிகாரிகள் ஆகியோர் 24 மணி நேரமும் இந்த அணைக்கட்டை கண்காணித்து வருகின்றனர். ஆகவே இதன் மூலம் திகன மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அணை பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இராஜாங்க அமைச்சர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், விக்டோரியா அணைக்கு அருகில் உணரப்பட்ட நிலஅதிர்வுகளினால் அணைக்கட்டு பாதிக்கப்படவில்லை என்றும், அணையின் பராமரிப்புக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் அணையின் ஸ்திரத்தன்மை குறித்து 100% நம்பிக்கையுடன் உள்ளனர் என்றும் கூறினார்.

அணையின் பராமரிப்பு சர்வதேச தரத்தின்படி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விக்டோரியா, ரந்தெனிகல, கொத்மலை மற்றும் சேனநாயக்க சமுத்திரத்தின் அணைகளை அடுத்த ஆண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள சிறப்பு பொறியியலாளர்கள் குழு ஆய்வு செய்வுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

விக்டோரியா அணை நிலஅதிர்வுகளைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது எனவும், திகன பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலஅதிர்வுகள் எதுவும் அணைக்கட்டின் பகுதியை நெருங்கவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், நிலநடுக்கத்தின் அளவு பத்து மடங்கு அதிகரித்தாலும் அணை சேதமடையாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

மிகவும் அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு 400 உபகரணங்களுடன் 24 மணி நேரமும் அணையை கண்காணித்து வருகின்றது. விக்டோரியா அணை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அணை பாதுகாப்பு திட்டத்தால் முழுமையாக புனரமைக்கப்பட்டதுடன் அணையின் தானியங்கி கதவு அமைப்புகள் கூட முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

தேசிய கட்டத்திற்கு 210 மெகா வாட் மின்சாரம் வழங்கப்படும் என்றும் மகாவலி பி மற்றும் சி வலயங்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு தண்ணீர் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், தற்போது சுமார் 70% நீர் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலநடுக்கம் சுண்ணாம்பு படிவங்களின் வெடிப்பால் ஏற்படுகின்றதா என்பது குறித்து இன்னும் ஆய்வு நடந்து வருகிறது. மகாவலி நிலங்களில் சுண்ணாம்பு படிவங்களின் அரிப்பைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மகாவலி இராஜாங்க அமைச்சின் செயலாளரான பொறியியலாளர் வசந்த பலுகஸ்வேவ இங்கு கருத்துத் தெரிவிக்கையில், விக்டோரியா அணை பாதுகாப்பு திட்டம் 1985 முதல் செயல்பட்டு வருகிறது. விக்டோரியா அணை தொடர்பாக இந்த திட்டம் ஐந்து முறை செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

பிரதான அணைகள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப பராமரிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட தரங்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், விக்டோரியா அணை தொடர்பான பூர்வாங்க மற்றும் சுருக்கமான அறிக்கைகள் அனைத்தும் அணை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டு நிபுணர்கள் குழுவின் உதவியுடன் அடுத்த ஆண்டு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் இந்த அணி அணையை ஆய்வு செய்த பின்னர், அணையின் ஸ்திரத்தன்மை தொடர்பில் சான்றிதழ் (அடுத்த 30 ஆண்டுகளுக்கானது) வழங்கப்படும் என்றும், சர்வதேச தரத்திற்கு ஏற்ப அணையை பராமரிக்கும் போது அந்த சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும் என்றும் அமைச்சுச் செயலாளர் பலுகஸ்வேவ கூறினார்.

இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளரான பொறியியலாளர் சுனில் எஸ்.பெரேரா உரையாற்றுகையில், பேராதனை பல்கலைக்கழகத்தில் புவியியல் மற்றும் சிவில் பொறியியல் துறையுடன் கலந்துரையாடிய பின்னர், ஒரு குழு விக்டோரியா அணை வளாகத்தில் கள ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்ததாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில வழிகாட்டுதல்களை வழங்கியதாகவும் கூறினார்.

நிலஅதிர்வுகள் குறித்த விடயத்தில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும், நிலஅதிர்வுகளினால் அணை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பதே மகாவலி அதிகாரசபையின் பங்கு என்றும் கூறினார்.

ரோபோ இயந்திரத்தின் மூலம் தினசரி அணையின் 74 இடங்களில் அதிர்வுகள் கண்காணிக்கப்பட்டு தரவுபடுத்தப்படுகின்றன எனவும் இதன் மூலம் அணையின் பாதுகாப்பு 100% உத்தரவாதம் என்றும் அவர் கூறினார்.

அணையைச் சுற்றியுள்ள பகுதியில் சுண்ணாம்புக் கல் படிவங்கள் இருந்தாலும், அணை நிலையான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் மாதிரிகள் இன்னும் உள்ளன என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த கள விஜயத்தில் மகாவலி அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் பி.ஜி. குணபால (தொழில்நுட்ப சேவைகள்), மகாவலி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ரோஹான அருப்பொல (பிரதான அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள்) மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் பொறுப்ப திகாரியான பொறியியலாளர் வசந்த எஹலபிட்டிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

எம்.ஏ.அமீனுல்லா

No comments:

Post a Comment