யாழ். மருத்துவ பீடத்தில் நாளை முதல் மீண்டும் பி.சி. ஆர். பரிசோதனை ஆரம்பம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 10, 2020

யாழ். மருத்துவ பீடத்தில் நாளை முதல் மீண்டும் பி.சி. ஆர். பரிசோதனை ஆரம்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நாளை புதன்கிழமை முதல் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்கு பாதிப்பேதும் ஏற்படாத வகையில் பி.சி.ஆர். பரிசோதனை ஆய்வு கூடம் மருத்துவ பீடத்தில் இருந்து வேறாக்கப்பட்டு, தனியான பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத்தர நியமங்களுக்கமைய பி.சி.ஆர். பரிசோதனைகள் இன்று முதல் இடம்பெறவுள்ளன.

வடக்கில் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்திரம் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தவிர்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.

இவ் கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் ஆரம்பிப்பது குறித்து முடிவு எட்டப்பட்டது. இதற்கமைய நாளை முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்போதுள்ள பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 மாதிரிகள் சோதனை செய்யப்பட முடியும். 

மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் தினமும் மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எஸ். ரமேஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad