துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டோருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டோருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை

துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டோருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

துருக்கியில் கடந்த 2016ம் ஆண்டு ஜனாதிபதி ரஸெப் தையிப் எர்துகானின் (Recep Tayyip Erdogan) ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதி அந்த புரட்சியை முறியடித்தார்.

அமெரிக்காவில் வசித்து வரும் துருக்கியைச் சேர்ந்த மத குரு பெதுல்லா குலென்தான், ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என ஜனாதிபதி ரஸெப் தையிப் எர்துகான் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தொடங்கினார்.

அதன்படி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடையதாக கருதப்படும் ராணுவ அதிகாரிகள், போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ராணுவ கமாண்டர்கள், விமானப் படைத் தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் மீதான வழக்கில் நேற்று (26) இறுதி விசாரணை நடந்தது.

இதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

எனினும் சரியாக எத்தனை பேருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பது குறித்த தகவலை துருக்கி நீதித்துறை வெளியிடவில்லை.

No comments:

Post a Comment