(செ.தேன்மொழி)
களுத்துறை தெற்கு பகுதியில் சட்டவிரோதமான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹின்னடியாங்கல பகுதியில் இன்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை மற்றும் பயாகல பகுதியைச் சேர்ந்த 22-36 ஆகிய வயதுக்கு இடைப்பட்ட ஏழு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்திற்கிடமான வேன் மற்றும் கார் ஒன்றை அவதானித்துள்ள விசேட அதிரடிப் படையினர், அதனை சோதனை செய்துள்ளதுடன், அதிலிருந்து சட்டவிரோத ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, கைக்குண்டு ஒன்றும், ரி56 ரக 4 தோட்டாக்கள், 4 வாள்களும் மற்றும் 6 கத்திகளையும் மீட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதயில் இவர்கள், அதற்கு புறம்பாக போக்குவரத்தில் ஈடுப்பட்டுள்ளதன் காரணமாக தனிமைப்படுத்தல் சட்ட விதகளுக்கமையவும், தண்டனை சட்டக்கோவை, சட்டவிரோதமான ஆயுதங்கள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான ஆயுதங்களை வைத்திருந்தமை ஆகிய சட்ட விதிகளுக்கமைய சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து, கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் எதிர்பார்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவர்கள் இந்த ஆயுதங்களை கொண்டு ஏற்கனவே ஏதாவது குற்றச் செயலில் ஈடுப்பட்டுள்ளார்களா? அல்லது திட்டமிட்டுள்ளார்களா? என்பது தொடர்பில் கண்டறிவதற்காக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையிரும் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment