பொதுநிதி தொடர்பான செயற்பாடுகளில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் : ஐக்கிய தேசிய கட்சி - News View

Breaking

Post Top Ad

Friday, November 20, 2020

பொதுநிதி தொடர்பான செயற்பாடுகளில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் : ஐக்கிய தேசிய கட்சி

(நா.தனுஜா)

இலங்கை அரசாங்கம் அடுத்த வருடம் 960 பில்லியன் ரூபா கடனை மீளச் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. எனினும் இந்தக் கடனை மீளச் செலுத்துவதற்கான வருமானத்தைப் பெறுவதற்கு எத்தகைய திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது என்பதை அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் தெளிவுபடுத்த தவறிவிட்டதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

எனவே பொதுநிதி தொடர்பான செயற்பாடுகளைப் பொறுத்த வரையில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பதுடன் அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செயற்படக் கூடாது என்றும் அக்கட்சி தெரிவித்திருக்கிறது.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாம் விசேட அவதானம் செலுத்தியிருக்கிறோம். ஒரு முறையான திட்டமிடலின்றி நாட்டின் வருமானத்தை உயர்த்துவதற்காக கடன் பெறும் அளவை அதிகரிப்பதென்பது நாட்டிற்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும். 

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொள்வதற்கு முன்னர், 2019 நவம்பரில் நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களின் பெறுமதி 7.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. அதனூடாக இவ்வருடத்திற்கான திறைசேரியின் தேவையை ஓரளவிற்கு ஈடுசெய்யக் கூடியதாக இருந்தது.

எது எவ்வாறெனினும் இலங்கை அரசாங்கம் அடுத்த வருடம் 960 பில்லியன் ரூபா கடனை மீளச் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. எனினும் இந்தக் கடனை மீளச் செலுத்துவதற்கான வருமானத்தைப் பெறுவதற்கு எத்தகைய திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த அரசாங்கம் தவறிவிட்டது.

எனவே 2021 ஆம் ஆண்டில் வருமானத்தை ஈட்டுவதற்கான சீரான வழிமுறைகள் எவற்றையும் முன்வைக்காமல் கடன் பெறுவது குறித்து மாத்திரமே வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட சீரற்ற பொருளாதாரக் கொள்கைகளே தற்போது நாட்டை பாரிய கடன் சுமைக்குள் தள்ளியிருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த எமது அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே நாட்டின் வருமானம் உயர்வடைந்தது. எனினும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்கான கடன் முகாமைத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

அதேபோன்று நாட்டின் பொதுநிதி தொடர்பில் அரசாங்கம் போதியளவு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படாமை விசனமளிக்கிறது. 

இவ்வருடத்தின் 2ஆம் மற்றும் 3 ஆம் காலாண்டிற்கான பொருளாதார செயலாக்கம் தொடர்பான தரவுகளை வெளியிடுவதில் காண்பிக்கப்படும் தாமதம் நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவான தாக்கங்களை ஏற்படுத்தும். 

எனவே பொதுநிதி தொடர்பான செயற்பாடுகளைப் பொறுத்த வரையில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பதுடன் அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செயற்படக்கூடாது என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad