அபாயம் அதிகரித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானித்திருப்பது பொறுத்தமற்றது - ஹர்ஷன ராஜகருணா - News View

About Us

About Us

Breaking

Friday, November 20, 2020

அபாயம் அதிகரித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானித்திருப்பது பொறுத்தமற்றது - ஹர்ஷன ராஜகருணா

(எம்.மனோசித்ரா) 

வைரஸ் பரவலின் ஆரம்ப கட்டத்திலேயே அரசாங்கம் முறையான தீர்மானங்களை எடுத்திருந்தால் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று கூற வேண்டியேற்பட்டிருக்காது. அபாயம் அதிகரித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானித்திருப்பது பொறுத்தமற்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கம்பஹா மாவட்டத்தில் வைரஸ் பரவ ஆரம்பித்து தற்போது கொழும்பு அபாய கட்டத்தை அடைந்துள்ளது. அரசாங்கம் உரிய நேரத்தில் உரிய தீர்மானத்தை எடுத்திருந்தால் இவ்வாறான பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்காது. அபாய நிலைமையை அவதானத்தில் கொண்டு கொழும்பை முழுமையாக முடக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

நாட்டில் ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 13 மரணங்களே காணப்பட்டன. எனினும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் நவம்பர் வரையான ஒரு மாத காலத்தில் அதற்கு இரு மடங்கிற்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன. எனவே மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு தற்போதாவது உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் மேலும் ஸ்திரப்படுத்தப்படும் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், பாடசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இந்த தீர்மானம் மிகவும் அபாயமானது என்பதே எமது நிலைப்பாடு. எனவே எடுத்துள்ள இந்த தீர்மானம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம். எமது இந்த கோரிக்கை அரசியல் நோக்கத்திலானது அல்ல.

இலங்கையில் தற்போது சுமூகமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதை காண்பிப்பதற்காக மக்களின் வாழ்வில் விளையாட வேண்டாம். நாளுக்கு நாள் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த சந்தர்ப்பத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்திருப்பது பொறுத்தமானதா என்பது சந்தேகமாகவுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது நாட்டின் பாதுகாப்பை பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்றுக் கொண்டது. எனவேதான் அந்த சந்தர்ப்பத்தில் நாம் அச்சமின்றி பாடசாலைகளை மீளத் திறந்தோம். ஆனால் தற்போது அவ்வாறானதொரு நிலைமை இல்லை. இது போன்ற எச்சரிக்கை மிக்க சூழலில் பாடசாலைகளை ஆரம்பித்து, பின்னர் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் மாணவர்களும் அதிபர்களும் பாடசாலை நிர்வாகமும் பொறுப்புடன் செயற்படவில்லை என்று ஜனாதிபதி குற்றஞ்சாட்டுவார்.

ஆரம்பத்திலேயே அரசாங்கம் சரியான தீர்மானங்களை எடுத்திருந்தால் கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டிருக்காது என்றார்.

No comments:

Post a Comment