சபாரே வைரஸ் தொடர்பில் அரசாங்கம் அறிந்து கொண்டு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச - News View

Breaking

Post Top Ad

Friday, November 20, 2020

சபாரே வைரஸ் தொடர்பில் அரசாங்கம் அறிந்து கொண்டு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

அமெரிக்காவில் பரவி வரும் சபாரே வைரஸ் தொடர்பில் அரசாங்கம் அறிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மத்திய நிலையத்துடன் எமது சுகாதார துறை தொடர்பு கொண்டு, அது தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் மேலுமொரு பயங்கரமான வைரஸ் ஒன்று தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. 

இபோலா வைரஸுக்கு சமமாக புதிய வைரஸ் ஒன்று உருவாகி இருக்கின்றது. சபாரே வைரஸ் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக அரசாங்கம் தெரிந்திருக்க வேண்டும். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மத்திய நிலையத்துடன் தொடர்பு கொண்டு, இது தொடர்பாக எமது அரசாங்கம் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

கொரோனா தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் ஏற்படும் புதிய வைரஸ் தொற்றுக்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறு செயற்படும் என நினைத்தும் பார்க்க முடியாது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் ஆரம்பத்திலேயே நாங்கள் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தினோம். அது தொடர்பில் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை தொடர்பில் இந்த சபையில் தெளிவுபடுத்தினோம்.

ஆனால் அரசாங்கம் என்ன செய்தது?. நாங்கள் தெரிவித்த விடயங்களை கொச்சைப்படுத்தி எங்களை விமர்சித்தார்களே தவிர, எடுக்க வேண்டிய எந்த முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. வைரஸ் பரவிய பின்னர் நாங்கள் ஆரம்பத்தில் தெரிவித்த விடயங்கள் ஒவ்வொன்றையும் மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதனால் இந்த அரசாங்கத்துக்கு மற்றவர்களின் அறிவுரைகளை கேட்கும் மன நிலை இல்லை. 

மற்றவர்களின் கருத்துக்களை விமர்சிக்கின்றாகளே தவிர, அது தொடர்பில் சிந்தித்துப் பார்க்கும் தேவை இல்லை. நினைத்த பிரகாரம் செயற்படும் கொள்கையே இருந்து வருகின்றது. அதனாலே கொராேனா வைரஸ் நாட்டுக்குள் இந்தளவு பரவுவதற்கு காரணமாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad