உடல்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் உறைகளை இலங்கையில் உற்பத்தி செய்யத் தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 17, 2020

உடல்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் உறைகளை இலங்கையில் உற்பத்தி செய்யத் தீர்மானம்

(க.பிரசன்னா)

இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் உறைகளை உற்பத்தி செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

உள்நாட்டில் உறைகளை உற்பத்தி செய்வது செலவு குறைந்ததாக காணப்படுவதுடன் ஒரு உறையின் உற்பத்திச் செலவு 450 ரூபாவாக காணப்படுகின்றது.

ஏற்கனவே உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட உடல்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் உறைகள் கையிருப்பில் இருந்த நிலையில் அவை 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களினால் பலியானவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது.

தற்போது உலகம் முழுவதும் குறித்த உறைகளுக்கான தேவையேற்பட்டுள்ளதால் இலங்கைக்கு தேவையான உறைகளை பெற்றுக் கொள்வது சிரமமானதாகும்.

எனவே, நாட்டின் முக்கிய மருத்துவமனைகளில் உடல் பைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இருப்பினும் குறித்த உறைகளை உற்பத்தி செய்வதற்கான கேள்விமனு கோரல்கள் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை இதற்கு முன்னர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து 1000 உடல்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் உறைகளை பெற்றுக் கொள்வதற்கு எடுத்த தீர்மானமானது மக்கள் மத்தியில் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்திருந்ததன் காரணமாக கோரப்பட்ட உறைகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வழங்கியிருக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad