சஹ்ரானின் மனைவி குறித்து வெளியிட்ட கருத்திற்காக எரான் விக்கிரமரத்னவிடம் சி.ஐ.டி. விசாரணை - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 17, 2020

சஹ்ரானின் மனைவி குறித்து வெளியிட்ட கருத்திற்காக எரான் விக்கிரமரத்னவிடம் சி.ஐ.டி. விசாரணை

(எம்.எப்.எம்.பஸீர்) 

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விஷேட விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹஷீமின் மனைவி, அப்துல் காதர் பாத்திமா ஹாதிய வழங்கிய வாக்கு மூலம் எனக் கூறி, திரிபுபடுத்தப்பட்ட பதிவுகள் சமூக வலைத்தளங்கள், சில இணையத்தளங்களில் செய்திகளாக வெளியிடப்பட்டுள்ளமை, அதனை அடிப்படையாகக் கொண்ட பதிவுகள் தொடர்பில் சி.ஐ.டி. விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அது தொடர்பிலேயே இவ்விசாரணைகள் நடாத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

அதன் பிரகாரம் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்துக்கு அழைக்கப்பட்ட எரான் விக்ரமரத்னவிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 12 ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பினை நடாத்தியுள்ள எரான் விக்ரமரத்ன, மஹாகந்துரே மதூஷின் மரணத்தை சுட்டிக்காட்டி, சஹ்ரானின் மனைவி ஹாதியாவின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்போது சஹ்ரானின் மனைவி தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டிருந்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அதனை மறுத்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளின் தகவல்களின் பிரகாரம் சஹ்ரானின் மனைவி ஹாதியா ஒரு போதும் தங்காலை சிறையில் தடுத்து வைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே எரான் விக்ரமரத்ன குறித்த ஊடக சந்திப்பில் வெளிப்படுத்திய தகவல்களின் மூலம் தொடர்பில் விசாரணைகளை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்துள்ளனர்.

அதன்போது, தான் ஊடகங்களில் வெளியான தகவல்களை மையப்படுத்தியே, மக்கள் பிரதிநிதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆர்வலர் எனும் ரீதியில் அந்த விடயத்தை பேசியதாக எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இவ்வாறான பின்னணியிலேயே எரான் விக்கிரமரத்னவின் வாக்கு மூலத்தில் வெளியிடப்பட்ட விடயங்களை மையப்படுத்தி கொழும்பு டெலிகிராப் எனும் செய்தி இணையத்தளம் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

கடந்த 13 ஆம் திகதி எழுத்து மூல முறைப்பாடொன்றினை மையப்படுத்தி இந்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. 

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க ஐ.சி.சி.பி.ஆர். எனப்படும் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம், தண்டனை சட்டக் கோவையின் 120, 485 ஆம் அத்தியயம், 2015 ஆம் ஆண்டின் குற்றச் செயலொன்றினால் பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சியாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின் 8 ஆம் அத்தியாயம், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98 ஆவது அத்தியாயத்தின் கீழ் குற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக சஹ்ரானின் மனைவி ஹாதியாவின் வாக்கு மூலம் எனக்கூறி திரிபுபடுத்தப்பட்ட விடயங்களை சமூக மயப்படுத்தி, அதனை மையப்படுத்திய செய்திகள் ஊடாக விசாரணை நிறுவனம் மீது பொதுமக்களின் குரோதத்தை தூண்டும் விதமாகவோ அல்லது குற்றவியல் நீதி தொடர்பிலான சந்தேகங்களை தோற்றுவிக்கவோ திட்டமிட்ட குழுவொன்று முயற்சிக்கின்றதா என இவ்விசாரணையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad