எஸ்.எம்.எம்.முர்ஷித்
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா செயலணியின் கிராம மட்டப்பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் அவசர ஒன்றுகூடல் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (27) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற இவ்வொன்றுகூடலில், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், உதவிப்பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், ஓட்டமாவடி பிரதேச சபை நிருவாக உத்தியோகத்தர் ஏ.அக்பர், செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.நௌபல், ஓட்டமாவடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.அஹ்ஷாப், செயலக உத்தியோகத்தர்கள், இராணுவ உயரதிகாரி, பொலிஸார், கொரோனா செயலணியின் கிராம மட்டப் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் பரவாமலிருக்கும் வகையில் மக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கமைய செயலகப் பிரிவில் தனிமைப்படுத்திலுள்ள குடும்பங்களை வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திணைக்கள அதிகாரிகள் என்ற அடிப்படையில் சென்று அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டுமென்றும், இவர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளார்களா? என்று சோதனை செய்வது தொடர்பிலும் அறிவுறுத்தப்பட்டது.
அத்தோடு, செயலகப் பிரிவிலுள்ள அரச திணைக்களங்களில் கடமையாற்றும் அரச அதிகாரிகள், பாடசாலையில் கடமையாற்றுவர்கள் என்ற அடிப்படையில் இவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் நடாத்தப்படுவது தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு தாக்கத்தினைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும், குறிப்பாக, அரச அதிகாரிகள் இதில் கூடிய கவனஞ்செலுத்த வேண்டுமென்றும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் கேட்டுக் கொண்டார்.
குறித்த பகுதியிலுள்ள மரக்கறி வியாபாரிகள் அனைவரும் ஒரு பொதுவான இடத்தில் முன்னயைதைப் போன்று வியாபாரம் நடாத்துவதற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உரிய இடத்தினை சிபார்சு செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் கூட்டத்தில் பணிப்புரை விடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment