போக்குவரத்தை வரையறுக்காமல் ஊரடங்கை நீக்குவதால் கொரோனா நாடு பூராகவும் பரவும் அபாயம் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 8, 2020

போக்குவரத்தை வரையறுக்காமல் ஊரடங்கை நீக்குவதால் கொரோனா நாடு பூராகவும் பரவும் அபாயம் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மேல் மாகாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் பிரதேசங்களை இனங்கண்டு, அந்த பிரதேசங்களுக்கான போக்கு வரத்தை வரையறுக்க முறையான வேலைத்திட்டம் ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னரே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் செயற்படுவதால் கொரோனா தொற்று நாடு பூராகவும் பரவும் அபாயம் இருக்கின்றது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே குறிப்பிடுகையில், மேல் மாகாணத்தில் இரண்டு வாரங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. 

மேல் மாகாணத்தை முற்றாக முடக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு அல்ல. என்றாலும் கொரோனா எச்சரிக்கை அதிகம் இருக்கும் பிரதேசங்கள் தொர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். குறிப்பாக கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் அதிகளவான நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் அதிகளவான மரணங்கள் ஏற்பட்டுள்ளன. 

இவ்வாறான பிரதேசங்களை இனம்கண்டு, அந்த பிரதேசங்களுக்கான போக்குவரத்தை வரையறுக்க முறைமையொன்றை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் எந்தவித ஆய்வும் இல்லாமல் மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதானால் கொரோனா தொற்று நாடு பூராகவும் பரவும் அபாயம் இருக்கின்றது.

அத்துடன் நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தும் புதிதாக கொரோனா கொத்தணிகள் உருவாகி இருக்கின்றன. கைத்தொழிற்சாலைகள், பொலிஸாரினால் ஏற்பட்டிருக்கும் கொத்தணி 350 பேரை தாண்டி இருக்கின்றது. சிறைச்சாலையில் இருந்தும் கொத்தணி உருவாகி இருக்கின்றது. 

அதனால் புதிதாக உருவாகும் கொத்தணிகளை நாங்கள் எந்தளவுக்கு கட்டுப்படுத்துகின்றோம் என்பதன் அடிப்படையிலே எதிர்காலத்தில் நாட்டை முற்றாக முடக்குவதா அல்லது சாதாரண மனித வாழ்க்கையை கொண்டு செல்லும் வகையில் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்துவதா என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment