மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து மக்கள் சேவை செய்து வந்த விஜியை கொலை செய்த கொடூரன் இறைவனிடம் இருந்து ஒருபோதும் தப்பித்துக் கொள்ள முடியாது. மக்களுக்காக அவர் செய்த சேவை எண்ணில் அடங்காது என, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பைக்கடவை கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ். விஜியேந்திரன் (55) என்பவர் நேற்றுமுன்தினம் (03) கள்ளியடி, ஆத்திமோட்டை பகுதியில் மர்மமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அவரது பூதவுடல் நேற்று (04) இரவு மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலகர்கள், மாந்தை மேற்கு பிரதேச செயலக பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது இரங்கல் உரை நிகழ்த்துகையிலேயே மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், கிராம அலுவலகர் விஜி இறந்து விட்டார் என்ற செய்தி எமக்கு கிடைத்தது. ஆனால், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது உயிர் உள்ளது என தெரிவித்தபோது மனதில் ஆறுதல் கிடைத்தது. ஆனால் அவர் எம்மை விட்டு சென்று விட்டார். நல்லவர்கள் வாழ்வது மிகவும் குறைவு.
விஜி என்ற தனி மனிதன் சேர்த்த சொத்துகள் பணம், பொருள் இல்லை. அன்பையும் மக்களின் ஆதரவையும் சேர்த்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச மக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு நல்லதொரு தந்தையாக இருந்தார்.
எங்களுக்கும் வழி காட்டி, எந்த ஒரு விடயமாக இருந்தாலும் பெறுப்பேற்று செய்து முடிப்பார். எல்லோருடைய தனிப்பட்ட தேவைகளையும் மனதில் கொள்வார். அனைத்து பிரச்சினைகளையும் மனதில் கொள்வார். நாங்கள் சில நேரங்களில் சோர்வாக இருந்தால் மனதிற்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவார்.
குறிப்பாக, தற்போதைய கொரோனா கால கட்டத்தில் அவர் செய்து வந்த பணி மிகப் பெரியது. அவரது சொந்த முயற்சியினால் சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பணத்தை பெற்று மக்களிடம் சேர்த்தார். அவர் இறுதி வரை செய்த சேவை எண்ணில் அடங்காது.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஒவ்வொரு அலுவலகர்களின் கவனத்திலும் அக்கறை கொண்டவர். பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றார். இப்படியான ஒரு மனிதனை எறும்பு கூடி கடிக்க யோசிக்கும். ஆனால் இந்த மனிதனை மிகவும் கொடூரமாக கொலை செய்வதற்கு அந்த அரக்கனுக்கு எப்படி மனம் வந்தது? என்று தெரியவில்லை.
ஆனால், அவன் மனிதனாக இருந்தால் தனது தவறை ஏற்றுக் கொள்ளுவான். இப்படி சமூகத்திற்கு சேவை செய்கின்ற எல்லோருக்கும் தந்தையாக இருக்கின்ற ஒருவரை கொலை செய்தவன் தனது தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அல்லது தானாகவே தன்னை அழித்துக் கொள்வான். இப்படிப்பட்ட கொடூரன் சட்டத்தில் இருந்து தப்பினாலும், இறைவன் நிச்சயமாக தண்டிப்பான். வாழும்போது வாழ்வது வாழ்க்கை இல்லை. நீ போகும்போது பார்ப்பது தான் வாழ்க்கை என அவர் மேலும் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்)
No comments:
Post a Comment