ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து பேரணி நடத்த ட்ரம்ப் முடிவு - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து பேரணி நடத்த ட்ரம்ப் முடிவு

ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வரும் ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை எதிர்த்து பேரணி நடத்த முடிவு செய்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் கடந்த 3ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 4 நாட்களாக நடைபெற்றது.

இதில் ஜனாதிபதி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் ஜோ பைடனுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது.

எனினும் ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த ஜோ பைடன் 279 வாக்குகள் பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை ட்ரம்பே ஜனாதிபதியாக இருப்பார். 

ஜனவரி 20ம் திகதி அவர் தனது அதிகாரங்களை ஜோ பைடனிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளார். தேர்தல் இன்னும் முடியவில்லை என்றும் தேர்தல் தொடர்பான தனது சட்ட போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறி வருகிறார்.

அதாவது ஜார்ஜியா, அரிசோனா, பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகவும் அந்த மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வருகிறார்.

இது தொடர்பாக அந்தந்த மாகாணங்களில் அவரது பிரசார குழு சார்பாக தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதனிடையே அதிகார மாற்றத்தை முன் நின்று நடத்த வேண்டிய ஜிஎஸ்ஏ எனப்படும் அரசு துறையில் ட்ரம்ப் நியமித்த ஆட்கள் இருப்பதால், வெற்றியாளரை அதிகாரபூர்வமாக அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், வெள்ளை மாளிகை பணியாளர்களை நியமித்தல், அதிகார மாற்றத்திற்கான செலவினம் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதில் பைடன் தரப்புக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, ஜனநாயக ரீதியில் அதிகார மாற்றத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்திக் கொடுக்க ஜோ பைடனுக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ட்ரம்பின் குடும்பத்திலும் சிலர் இதனை வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனைவி மெலனியா மற்றும் மருமகன் ஜெரட்குஷ்னர் ஆகியோர் தோல்வியை ஒப்புக்கொண்டு அமைதியான முறையில் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற ட்ரம்பை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதேசமயம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல ட்ரம்பின் நட்பு வட்டாரத்தில் உள்ள சில முக்கிய நபர்கள் அவரது நிலைப்பாடு மிகவும் சரியானது என்றும் அவர் தனது சட்ட போராட்டத்தை தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் விடாபிடியாக உள்ளார்.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து முக்கிய மாகாணங்களில் தேர்தல் பிரசார பாணியில் பிரமாண்ட பேரணிகளை நடத்த ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக தான் கூறும் மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கையை வலியுறுத்தி அவர் இந்த பேரணிகளை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad