சட்டவிரோத மாடு கடத்தலை தடுக்க சென்ற பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி - ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

சட்டவிரோத மாடு கடத்தலை தடுக்க சென்ற பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி - ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி

ஆனமடுவ நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில், ஆனமடுவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளதுடன், ஊழல் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து நேற்றிரவு (04) 11.45 மணியளவில் இடம்பெற்றது. 

நிக்கவரெட்டிய, இஹலகம பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஆர்.எம்.ஏ. ஹேமந்த ரத்நாயக்க (38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த ஊழல் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி மதுரங்க ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இரு அதிகாரிகளும், ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த சமயம் கொட்டுகச்சி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாடுகளை லொறியொன்றில் ஏற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது. 

அச்சந்தர்ப்பத்தில் ஆனமடுவ பொலிஸிற்கு சொந்தமான பொலிஸ் நடமாடும் சேவை வாகனம் மற்றுமொரு கடமைக்காக சென்றிருந்தது. அதன் காரணமாக உயிரிழந்தவர், தனது சொந்த காரில் குறித்த இடத்திற்கு செல்ல தயாராகியுள்ளார். 

இவ்விபத்தில் உயிரிழந்தவர், தனது வாகனத்திற்கு முன்னால் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான லொறிக்கு பின்னால் தான் செலுத்தி வந்த காரைத் திருப்ப நடவடிக்கை எடுத்திருந்தார். 

இச்சந்தர்ப்பத்தில் கார் சறுக்கிச் சென்று ஆனமடுவ நகரிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வேளையில் மாடுகளை ஏற்றிய லொறி தப்பிச் சென்றுள்ளது. 

விபத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளை பொதுமக்கள் ஆனமடுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் வைத்தியசாலையில் அனுமதிக்கும்போது அவர் உயிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(புத்தளம் விசேட நிருபர் - அப்துல் நமாஷ்)

No comments:

Post a Comment