பிரதமரின் உறுதி மொழி மீது நம்பிக்கை உண்டு என்கிறார் வடிவேல் சுரேஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 28, 2020

பிரதமரின் உறுதி மொழி மீது நம்பிக்கை உண்டு என்கிறார் வடிவேல் சுரேஸ்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா அடிப்படை சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படுமென சபையில் பிரதமர் உறுதி வழங்கியுள்ளதால் அதனை அவர் நிறைவேற்றுவாரென நம்புகிறோமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் காணி, பெருந்தோட்ட அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சமூகமென்பது சிக்கல்களுக்குள்ளான மற்றும் தொடர்ந்து ஏமாற்றப்படும் ஒரு சமூகமாக உள்ளது. 

தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டின் மீது அக்கறையும் பற்றும் கொண்டவர்களாகும். ஐந்து தலைமுறையாக இந்த மண்ணுக்காக உழைக்கின்றனர். ஆனால், 1,000 ரூபா 1,500 ரூபா என தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்றனர்.

நாட்டின் ஒவ்வொரு தொழில்துறைக்கும் சம்பள முறைமைகள் உள்ளன. தோட்டத் தொழிலாளர்கள் கொரோனா காலத்திலும் பணியாற்றியவர்கள். தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் வஞ்சிக்கப்படுகின்றனர். உழைப்புக்கேற்ற ஊதியத்தையே கேட்கின்றனர். உழைப்புக்கேற்ற ஊதியத்தை நாங்கள் சார்ந்திருந்த அரசாங்கமும் வழங்கவில்லை.

வரவு செலவுத் திட்ட உரையில் ஜனவரி மாதம் முதல் 1,000 ரூபா சம்பளம் வழங்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளார். அதனை பெற்றுக்கொடுப்பாரென நம்புகிறோம். அதேபோன்று தேயிலைத் தொழில்துறையை காப்பாற்ற வேண்டிய கடப்பாடும் உள்ளது.

பெருந்தோட்டத் தொழிலை கலாசாரத்துடன் தொடர்புப்படுத்தி மிகவும் ஆர்வத்துடன், எமது மக்கள் செய்திருந்தனர். ஆனால், 22 கம்பனிகளும் பெருந்தோட்டத் துறையை நாசமாக்கிவிட்டன. கம்பனிகளின் செயற்பாடு காரணமாக இத்தொழில்துறை மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. 

தொழிலாளர்களின் ஈ.பி.எப்., ஈ.டி.எப். கட்டப்படுவதில்லை. சுகாதார நடவடிக்கைகளை பார்ப்பதில்லை. 22 கம்பனிகளும் இலாபத்தை மாத்திரம் இலக்காக கொண்டு செயற்பட்டமையின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment