அமைச்சுப் பதவிக்கும், ரணிலை காப்பாற்றவும் செயற்பட முடியுமென்றால் உடல்களை எரிப்பதற்கு எதிராக ஏன் ஒரே கருத்துடையவர்களாக ஒற்றுமைப்பட முடியாது? : சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 17, 2020

அமைச்சுப் பதவிக்கும், ரணிலை காப்பாற்றவும் செயற்பட முடியுமென்றால் உடல்களை எரிப்பதற்கு எதிராக ஏன் ஒரே கருத்துடையவர்களாக ஒற்றுமைப்பட முடியாது? : சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில்

நூருள் ஹுதா உமர்

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா நோயினால் இறந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் மனித உரிமை அமைப்புகளால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கைகளுக்கப்பால் இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் கொரோனாவினால் இறந்த உடல்கள் எரிக்கப்பட வேண்டுமென கட்டாயமாக்கியிருக்கையில் இறந்த உடல்களை சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தினால் அடக்கம் செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கும் வேளையில் நீதி அமைச்சர் அலி சப்ரியால் அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படாது அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பொழுது ஆளும் கட்சியின் அமைச்சர்களுக்கிடையே வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டிருந்ததை காணக்கூடியதாகவிருந்து. இது தொடர்பில் பெரும்பான்மை சமூகத்தின் புத்திஜீவிகளால் அடக்கம் செய்யப்படுவதனால் தொற்று பரவாது என்றும் நிலத்தடி நீர் மாசுபடாது என்றும் கருத்து முன்வைக்கப்படுகின்றது. ஆனால் எரிக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வற்புறுத்திக் கொண்டிருப்பது உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும் என மாற்றத்திற்கான முன்னணியின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார். 

முஸ்லிம் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்வது தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், இது இவ்வாறிருக்க அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்த ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரரும் ஞானசார தேரரும் ஆர்ப்பாட்டத்தினை கண்டியில் ஏற்பாடு செய்திருந்த போது நிலைமை மோசம் அடையவே அரசாங்கத்தில் இருந்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தமது அமைச்சுக்களை ராஜினாமா செய்து மக்களை ஏமாற்றி அரசியலில் வித்தை காட்டினார்கள். 

தங்களுடைய அமைச்சுப் பதவிகளுக்காகவும் ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் அவர்களால் செயற்பட முடியுமென்றால் முஸ்லிம் உடல்களை எரிப்பதற்கு எதிராக ஏன் ஒரே கருத்துடைய ஒரு கூட்டமாக ஒற்றுமைப்பட முடியாது? என்ற கேள்வி மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஏன் மௌனித்து இருக்கின்றார்கள்? 

இந்நிலை தொடருமானால் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவது தொடர்ந்து கொண்டேயிருக்கும். இவ்விடயம் தொடர்பில் முஸ்லிம் கட்சித் தலைவர்களும் ஜம்இய்யத்துல் உலமாவும் புத்திஜீவிகளும் வைத்திய கலாநிதிகளும் சட்ட வல்லுனர்களும் ஒன்றிணைந்து கலந்துரையாடல்கள் செய்து மக்களுக்கு தெளிவினை ஊட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களிடையே நேரில் சென்று ஆத்மீக வழிகாட்டலின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்தி, முஸ்லிம்கள் நாட்டிற்கு பிரயோசனமுள்ள ஒரு சமூகம் என்பதை வெளிப்படுத்தி, தேசிய விடயங்களில் பங்கெடுக்கின்ற சுயநலமற்ற சமூகம் என்பதையும் வெளிக்காட்ட பேரினவாதம் தலைவிரித்தாடும் இக்காலத்தில் ஏன் மக்களை தெளிவூட்டுவதற்காக ஒற்றுமைப்பட முடியாது?

20வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்த முஸ்லிம் எம்பிக்கள் கூட இது தொடர்பில் ஜனாதிபதியிடமோ பிரதமரிடமோ எடுத்துக்கூறி தீர்வினைப் பெற தவறி விட்டனர். முஸ்லிம் கட்சித் தலைவர்களின் அமைதியான போக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களின் போக்கும் வித்தியாசமான முறையில் காணப்படுகின்றது. 

ஆனால் சமூகம் சார்ந்த விடயங்களுக்கு அப்பால் தேர்தல் ஒன்று வருகின்ற பொழுது முஸ்லிம் சமூகம் பெரும்பான்மை சிங்கள சமூகத்தோடு முட்டி மோதிக் கொள்ளும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுகின்றனர். ஆனால் எம்பி பதவியை அடைந்ததும் மக்களின் நலனில் எந்த அக்கறையும் இல்லாதவர்களாக காணப்படுகின்றனர்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மந்திர வெளிப்பாடாகவே உடல்கள் எரிக்கப்படுவதை பார்க்க வேண்டியுள்ளது. எனவே முஸ்லிம் சமூகத்தை தேசப்பற்றுள்ள ஒரு சமூகமாக மாற்றுவதற்கு அரசியல்வாதிகள் கட்சியரசியலுக்கப்பால் உடல்கள் எரிக்கப்படுவதை நிறுத்துவதற்கு ஒன்றிணைய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad