முல்லைத்தீவில் ஆபத்தான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

முல்லைத்தீவில் ஆபத்தான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீதியோரங்களில் காணப்படுகின்ற அபாயகரமான மரங்களை அகற்றுமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறிப்பாக, அண்மைய நாட்களாக கன மழை பொழிவதோடு, காற்று வீசுகின்றமையால் மரங்கள் முறிந்து விழுந்து வீதியால் பயணிக்கின்றவர்கள் காயமடைகின்ற சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

இரண்டரை மாதங்களுக்கு முன்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு வீதியோரத்தில் இருந்த மரமொன்று கடும் காற்று மற்றும் மழை காரணமாக சரிந்து வீழ்ந்ததில் வீதியால் பயணித்த இருவர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இதனைவிட அண்மையில் மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் வீதியோரத்தில் நின்ற மரம் சரிந்து வீழ்ந்ததில் வீதியால் பயணித்த ஒருவர் காயமடைந்திருந்தார்.

இவ்வாறு தொடர்ச்சியாக உயிரிழப்புக்களையும் காயங்களையும் ஏற்படுத்தி வருகின்ற வீதியோரத்தில் நிற்கின்ற அபாயகரமான மரங்களை அகற்றி விடுமாறு மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் வீதியோரங்களில் நிற்கின்ற அபாயகரமான மரங்களை மிக விரைவாக அகற்றுமாறும் இவ்வாறு மக்களது உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் சேதங்களை ஏற்படுவதற்கு முன்னதாகவே இவற்றிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோருகின்றனர்

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து வீதிகளின் ஓரங்களிலும் இவ்வாறான மரங்கள் காணப்படுகின்றதாகவும் அவற்றை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கின்ற அதேவேளையில், முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் 19ஆவது கிலோமீற்றருக்கும் இருபதாவது கிலோமீற்றருக்கும் இடையில் மிக ஆபத்தான நிலையில் இருக்கின்ற குறித்த மரத்தையும் மிக விரைவில் அகற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

(மாங்குளம் நிருபர் - சண்முகம் தவசீலன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad