இன்று (26) முதல் கண்டி மத்திய சந்தையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மத்திய பொதுச் சந்தையில் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த 8 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, கண்டி மாநகர சபையினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 நாட்களுக்கு முன்பு, மரக்கறி சந்தையில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதாகவும் அதனால் மூன்று நாட்களுக்கு முன்பு குறித்த மரக்கறி விற்பனை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டதாக, தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த தொற்றுதலுக்கு உள்ளானவருடன் நெருங்கிய 7 பேருக்கு மேற்கொண்ட PCR பரிசோதனைகள் மூலம் அவர்களுக்கு தொற்று கண்டறிந்தமையினால் மாநகர சபை இம்முடிவை எடுத்துள்ளது.
மாநகர சபைக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களிலும் இளைஞர்கள் விளையாடுவதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், ஆகவே சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களின்படி இந்த நேரத்தில் மக்கள் கூட்டமாக கூடுவது உகந்ததல்ல என்பதால் மாநகர சபைக்கு கீழ் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் மாநகர சபையின் பிரதி முதல்வர் இலாஹி ஆப்தீன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கண்டி நகரை அண்டிய பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (26) முதல் டிசம்பர் 04ஆம் திகதி வரை, கண்டி நகருக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
(எம்.ஏ. அமீனுல்லா)
No comments:
Post a Comment