இலங்கை - இந்திய - மாலைதீவு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது - News View

About Us

About Us

Breaking

Sunday, November 29, 2020

இலங்கை - இந்திய - மாலைதீவு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது

இலங்கை, இந்திய மற்றும் மாலைதீவுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் இலங்கையின் தலைமைப் பொறுப்பில் நேற்று (28) கொழும்பிலுள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் கூட்டம், மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி மற்றும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் பங்களாதேஷ், மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிரேஷ்ட மட்ட பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

கொவிட்-19 தொற்று நோய் சூழ்நிலையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ‘ஏயார் பப்பில்' எனும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றபட்டதுடன் பார்வையாளர்களாக கலந்து கொண்ட நாடுகளின் பிரதிநிதிகள் இணைய வழி தொடர்புகள் மூலம் கலந்து கொண்டனர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட கூட்டம் 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் இதுவரை மூன்று கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் இறுதி கூட்டம் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் புது டில்லியில் நடைபெற்றது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு மூன்று நாடுகளுக்கிடையில் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டங்களில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இந்த கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் எழுகின்ற பொது விடயங்களில் பெறுமதிவாய்ந்த ஒத்துழைப்பை பெறல், கடல்சார் விழிப்புணர்வு, மனிதாபிமான உதவிகள், அனர்த்த நிவாரணங்கள், கூட்டுப் பயிற்சி, திறன் மேம்பாடு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல,; கடல் மாசடைதல், கடலுக்கு அடியிலான மரபுரிமைகள் போன்ற விடயங்களில் ஒத்துமைப்பை அதிகரித்து அது தொடர்பிலான சவால்களை முறியடித்து பொது நன்மை விடயங்களில் கவனம் செலுத்த இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக சந்திப்புக்களை நடத்தவும் தேவையான தகவல்களை பரிமாறி உரிய நேரத்தில் கலந்துரையாடி தேவையான முடிவுகளை எடுக்கவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாடுகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்தன. ஜனாதிபதியின் விஷேட ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஒமர் அப்துல் ரஸ்ஸாக் மற்றும் முப்படைகளின் தளபதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு வருகை தந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டின் ஒரு அங்கமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

ஸாதிக் ஷிஹான்

No comments:

Post a Comment