ஒரு மாதத்தில் 2 இலட்சம் பி.சி.ஆர். பரிசோதனைகளில் 7000 பேருக்கு கொரோனா : கேகாலை, குருணாகலில் அபாய நிலைமை - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 3, 2020

ஒரு மாதத்தில் 2 இலட்சம் பி.சி.ஆர். பரிசோதனைகளில் 7000 பேருக்கு கொரோனா : கேகாலை, குருணாகலில் அபாய நிலைமை

 (எம்.மனோசித்ரா) 

நாட்டில் கொவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை உருவாகி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள போதிலும், ஆரம்ப கட்டத்தை விட தற்போது நிலைவரம் எச்சரிக்கைமிக்கதாகியுள்ளது. 

கடந்த ஒன்பது மாதங்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களை விடவும் இரு மடங்கிற்கும் அதிகமான தொற்றாளர்கள் இந்த ஒரு மாதத்திற்கும் இனங்காணப்பட்டுள்ளனர். 

குறித்த காலப்பகுதியில் சுமார் 3 இலட்சம் பி.சி.ஆர். பரிசோதனைகளில் 3000 தொற்றாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டனர். எனினும் நிறைவடைந்த ஒரு மாதத்தில் 2 இலட்சம் பி.சி.ஆர். பரிசோதனைகளில் 7000 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகின. 

கடந்த முதலாம் திகதி ஜம்பட்டா வீதியில் உயிரிழந்த 68 வயதுடைய பெண்ணின் சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர் தொற்றுக்குள்ளாயிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அம்மரணம் 22 ஆவது கொரோனா மரணமாக அறிவிக்கப்பட்டது. 

உயிரிழந்த குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினரொருவருக்கு ஏற்கனவே கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், குடும்பத்திலுள்ள ஏனையோர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண் நியுமோனியாவினால் பாதிக்கப்பட்டிருந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை நேற்று மாலை 7 மணியளவில் 23 ஆவது கொரோனா மரணமும் பதிவானது. கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்தார். அவரது பிரேத பரிசோதனையில் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. குறித்த பெண் தடிமன், இருமல் என்பவற்றோடு வேறு நோய்க்கு உட்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய 272 தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டனர். இவர்களில் மூவர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலுள்ளவர்களாவர். ஏனைய 269 பேர் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோராவர். அதற்கமைய மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 8129 ஆக அதிகரித்துள்ளது. 

இலங்கையில் கொரோனா பரவல் முதலாம் அலை ஏற்பட்ட போது வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களே பெருமளவில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். எனினும் இரண்டாம் அலையில் சமூகத்திலிருந்து தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு, கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபடும், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 

மேல் மாகாணத்தில் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அபாயமுடையவையாக இனங்காணப்பட்டிருந்த போதிலும் தற்போது கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 
திங்கட்கிழமை இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 39 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உள்ளடங்குவதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய இராஜகிரிய விசேட அதிரடிப் படையில் 23 பேருக்கும், நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒருவருக்கும், குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஒருவருக்கும், இராஜதந்திர பாதுகாப்பு பிரிவில் இருவருக்கும், பொரளை பொலிஸ் நிலையத்தில் 8 பேருக்கும், வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் இருவருக்கும், புறக்கோட்டையில் ஒருவருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேகாலை 
கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாத்தகம, மாவனெல்லை, மற்றும் புளத்கொஹூபிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளும் கலிகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளும் திங்கட்கிழமை இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. 

திங்கட்கிழமை கேகாலை மாவட்டத்தில் வறக்காபொல பிரதேசத்தில் 11 தொற்றாளர்களும், அத்தனாயக்க பிரதேசத்தில் 10 தொற்றாளர்களும், யட்டியாந்தோட்டையில் ஒரு தொற்றாளரும் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

இம்மாவட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவுபடுத்திய மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, கேகாலை மாவட்டத்தில் இதுவரையில் 127 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 1547 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளை சுகாதார பாதுகாப்புடன் முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். 

குருணாகல் 
இதேவேளை குருணாகல் மாவட்டத்தில் கிரிஉல்ல பிரதேசமும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 4 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

ஒரு மாதத்தில் 2 இலட்சம் பி.சி.ஆர். பரிசோதனைகள் 
ஒக்டோபர் 3 ஆம் திகதி மினுவாங்கொடை கொத்தணியில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. 

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 819 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 2 இலட்சத்து 6 ஆயிரத்து 422 பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

கிடைக்கப் பெற்ற முடிவுகளில் 7582 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது நூற்றுக்கு 3.67 சதவீதமாகும் என்று கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

நிலைமையைக் கட்டுப்படுத்த ஒரு மாதம் செல்லும் 
தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அமைய தொடர்ந்தும் செயற்பட்டால் ஒரு மாத காலத்திற்குள் கொத்தணியை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்று பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். 

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதன் பின்னர் கடந்த ஒரு மாத காலமாக இனங்காணப்பட்டதை விட குறைந்தளவான தொற்றாளர்களே அண்மையில் இனங்காணப்படுகின்றனர். எனினும் இனி அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட மாட்டார்கள் என்று கூற முடியாது. 

தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது நாம் எதிர்பார்க்காத பிரதேசங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடும். இவ்வாறான நிலைமை தொடருமானால் அபாய நிலையும் நீடிக்கும். 

எனினும் தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அமைய தொடர்ந்தும் செயற்பட்டால் ஒரு மாத காலத்திற்குள் கொத்தணியை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொருவரதும் பொறுப்பு 
தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி காணப்பட்டால் அவர்களால் வைரசுக்கு ஈடுகொடுக்க முடியும். எனினும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகக் காணப்பட்டால் மரணத்திற்கு முகங்கொடுக்கக் கூடிய அபாயமே உள்ளது என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார். 

வைரஸ் பரவலில் தற்போது 3 ஆம் கட்டத்தில் இருக்கின்றோம். இதே நிலைமை தொடருமானால் வைரஸ் பரவல் கை மீறிச் செல்லக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். 

பி.சி.ஆர். எடுக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை 
பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கும் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவை இல்லை எனினும் முதலாவது தொடர்பாளர்கள், அறிகுறிகள் உடையோர் நிச்சயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். 

அநாவசிய கால தாமதம் பரவலுக்கு ஏதுவாகும் 
பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் தாமதமடைவதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு முடிவுகள் தாமதமடைவதால் தொற்றாளர்களை இனங்காண்பதிலும் சிக்கல் ஏற்படும். தொற்றாளர்கள் இனங்காண்பதில் தாமதம் ஏற்பட்டால் பிரதேசங்களில் பரவலைத் தடுப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார். 

கேகாலை, களுத்துறை, குருணாகல் மாவட்டங்களுக்கு பிரத்தியேகமாக பி.சி.ஆர். இயந்திரங்களை வழங்கப்பட வேண்டும். இவ்வாறாக அநாவசிய தாமதங்களை தவிர்த்து கிளை கொத்தணிகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment