கொரோனாவால் கொழும்பிலேயே 16 மரணங்கள் : விஷேட ஆய்வு அவசியம் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 6, 2020

கொரோனாவால் கொழும்பிலேயே 16 மரணங்கள் : விஷேட ஆய்வு அவசியம் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் அண்மையில் பதிவான 16 கொரோனா மரணங்களில் பெரும்பாளவானவை கொழும்பு மாநகர சபையை அண்மித்த பகுதிகளிலேயே பதிவாகியுள்ளன. இந்த மரணங்களில் ஏதேனும் விசேட காரணி தாக்கம் செலுத்துகின்றதா என்பது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயங்களை வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், இதுவரையில் நாம் தொற்றாளர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் இனிவரும் நாட்களில் மரணங்களைப் பற்றி பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாத ஆரம்பத்தில் கொரோன மரணங்கள் பற்றியே கூடுதல் கவனம் செலுத்த வேண்டியேற்படும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் சரியான தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுப்பது அத்தியாவசியமானதாகும். ஒன்பது மாதங்களில் 13 மரணங்கள் என்ற நிலைமை தற்போது இரு வாரங்களில் 16 மரணங்கள் என்ற நிலைமையாக மாறியுள்ளது. இது மிகவும் அபாயமான நிலைமையாகும்.

அண்மையில் பதிவாகிய 16 மரணங்களில் பெருமளவானவை கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்டவையாகும். கொழும்பு மாநக சபையை அண்மித்த பகுதிகளில் பரவும் வைரஸினால் பதிவாகும் மரணங்களுக்கு ஏதேனும் விசேட காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

வைரஸ் மாற்றமடைந்துள்ளதா அல்லது அதற்கு சுற்றுச் சூழல் இசைவாக்கமடைந்துள்ளதா அல்லது மக்களின் நடமாட்டமா இதற்கு காரணம் என்று துரிதமாக கண்டறியப்பட வேண்டும். 

எனவே கொவிட் மரணங்கள் தொடர்பான மீளாய்வு செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சிடம் வலியுறுத்துகின்றோம். அண்மையில் பதிவாகிய ஒவ்வொரு மரணங்கள் தொடர்பிலும் வெவ்வேறாக மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

வியாழக்கிழமை 383 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் வீடுகளில் அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். இதன் மூலம் வழமைக்கு மாறாக சமூகத்திலிருந்து பெருமளலான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என்பது தெளிவாகிறது.

25 மாவட்டங்களிலும் 60 சுகாதார மருத்துவ பிரிவுகளுக்கும் அதிகமாக வைரஸ் பரவியுள்ள நிலையில், நாட்டில் காணப்படுகின்ற சிவப்பு வலயங்களை மேலும் விஸ்தரிக்காமல் அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது எம் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும் என்றார்.

No comments:

Post a Comment