(எம்.எப்.எம்.பஸீர்)
நீர்கொழும்பிலிருந்து கடலுக்கு சென்றுள்ள இலங்கை மீனவ படகொன்று, சர்வதேச கடலில் போதைப் பொருளினைப் பெற்றுக் கொண்டு, மீள இலங்கை நோக்கி வரும் போது, 6 இலங்கையர்களுடன் இந்திய கரையோர பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
'ஷெனாயா துவ' எனும் இந்த மீனவ படகிலிருந்து ஹெரோயின் போதைப் பொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 110 கிலோ ஹெரோயினும் 6 துப்பாக்கிகளும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இந்த விடயம் குறித்து உள்நாட்டில் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 64,40,42,29,25 ஆகிய வயதுடையவர்களும், மொறட்டுவையைச் சேர்ந்த ஒருவரும் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரினால் கைப்பற்றப்பட்ட படகில் இருந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மையில் தெற்கில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் தெற்கில் மீட்கப்பட்ட 100 கிலோ ஹெரோயினும், இதேபோல் கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், இந்த மீன் பிடி படகு தொடர்பிலும் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தனாலிருந்து வந்த ஈரன் கப்பல் ஒன்றிலிருந்து போதைப் பொருளினைப் பெற்றுக் கொண்டு திரும்பும் போது, குறித்த மீன் பிடி படகில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, அது மாலைத் தீவு பகுதியை நோக்கி இழுத்து செல்லப்பட்டுள்ளது.
இதன்போதே இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் குறித்த படகில் சந்தேகம் கொண்டு சோதனை செய்த போது ஹெரோயினும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினமே நீர் கொழும்புக்கு சென்றுள்ள பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமந்த வீரசேகரவின் மேற்பார்வையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment