அபராதம், தண்டனை வழங்குவதன் மூலம் பலவந்தமாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதை விட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சிறந்தது - விஜித ஹேரத் - News View

Breaking

Post Top Ad

Tuesday, October 13, 2020

அபராதம், தண்டனை வழங்குவதன் மூலம் பலவந்தமாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதை விட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சிறந்தது - விஜித ஹேரத்

(எம்.மனோசித்ரா) 

அபராதம் விதிப்பதன் மூலமும் தண்டனை வழங்குவதன் மூலமும் பலவந்தமாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதை விட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சிறந்ததாகும். அபராதம் விதிப்பதன் மூலம் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாழ்வாதாரத்தில் மேலும் மேலும் நெருக்கடிகளையே எதிர்கொள்வார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். 

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக அபதாரம் விதிக்கப்படும் என்றும் 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட்-19 வைரஸின் அபாயம் குறித்து மக்களை தெளிவுபடுத்துவதை அரசாங்கம் கைவிட்டமையினாலேயே இரண்டாவது அலைக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. இரண்டாவது அலையால் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள போதிலும் அதன் மூலம் இதுவரையில் இனங்காணப்படவில்லை. அதனை துரிதமாக இனங்காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதேபோன்று பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை தாமதப்படுத்தாமல் துரிதமாக பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். 

ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்திற்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கேனும் 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்க வேண்டும். 

பொலிஸ் நியமனங்களில் இடமாற்றங்கள் பதவிகள் மாற்றப்படுகின்றமை முற்று முழுதாக அரசியல் தேவைக்காக மாத்திரமேயாகும். சுகாதாரத்துறையில் பதவி மாற்றங்கள் குறித்து சுகாதார அமைச்சரே பொறுப்பு கூற வேண்டும். 

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் பதவி நீக்கப்பட்மைக்கு எழுந்த விமர்சனங்களின் காரணமாகவே தற்போது அவர் சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அது குறித்து கவனம் செலுத்துவதே சிறந்ததாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad