தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் சேவை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் சேவை

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கென ஒதுக்கப்பட்ட விசேட புகையிரத பெட்டிகள் சிலவற்றை, வழமையான புகையிரத சேவையில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் நிலந்த பெனாண்டோ அறிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதோடு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை (12) முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இப்பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவ, மாணவிகளுக்காக பிரதான புகையிரதப் பாதைகளில் பயணிக்கும் ரயில் சேவைகளில், பாதுகாப்பு நடைமுறையுடன் கூடிய விசேட புகையிரத பெட்டிகள் இணைக்கப்படும் என, புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இப்புகையிரத பெட்டிகளில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மாத்திரம் ஏற்றப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள கம்பஹா, வியாங்கொடை ஆகிய புகையிரத நிலையங்களுக்கிடையிலான புகையிரத நிலையங்களிலும், புகையிரதங்கள் நிறுத்தப்பட்டு, குறித்த மாணவர்கள் மாத்திரம் ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ஏற்றப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்பெட்டிகளில் பொதுமக்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்பதோடு, மாணவர்களின் பாதுகாப்பிற்காக புகையிரத பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் பொலிஸ் பாதுகாப்பும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (09) பிற்பகல் பரீட்சை திணைக்களத்தில் இது தொடர்பாக இறுதிப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதோடு, இது தொடர்பான முடிவு பிற்பகல் 4.00 மணியளவில் அறிவிக்கப்படும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், இவ்வாறு ஊரடங்கு அமுலில் உள்ள இடங்களில் புகையிரதங்களை நிறுத்துவது தொடர்பில் மேல் மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுடனும் கலந்துரையாடியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றி பரீட்சை நிலையங்களைச் சென்றடைவது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment