போரை நிறுத்த அர்மீனியா - அசர்பைஜான் நாடுகள் ஒப்பந்தம் : ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் முன்னிலையில் சுமுகமாக நடந்த பேச்சுவார்த்தை - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

போரை நிறுத்த அர்மீனியா - அசர்பைஜான் நாடுகள் ஒப்பந்தம் : ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் முன்னிலையில் சுமுகமாக நடந்த பேச்சுவார்த்தை

நாகோர்னோ - காராபாக் எல்லைக்காக நடைபெற்று வந்த போரை நிறுத்துவதற்கு அர்மீனியா, அசர்பைஜான் நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.

நாகோர்னோ - காராபாக் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. 

இடையில் சில ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த மாதம் 27ம் திகதி முதல் மீண்டும் தொடங்கியது. இரு நாடுகளின் படைகளும் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த மோதலில் குடியிருப்பு பகுதிகள் இரு தரப்பு படையினராலும் தாக்குதலுக்கு உள்ளானது. மேலும், மோதலில் பொதுமக்கள், அசர்பைஜான் படையினர், அர்மீனிய படையினர், அர்மீனிய ஆதரவு நாகோர்னோ - காராபாக் கிளர்ச்சி படையினர் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 

இந்நிலையில் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போரை நிறுத்த அர்மீனியா - அசர்பைஜான் நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் முன்னிலையில் அர்மீனிய மற்றும் அசர்பைஜான் நாட்டுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மாஸ்கோ நகரில் சுமார் 10 மணி நேரம் நீடித்த சுமூகமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு தரப்பினரும் போரை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டனர்.

மேலும் சண்டையின்போது சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை பரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மதியம் முதல் போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதாக செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment