காங்கேசன்துறை கடற்படை வீரர்கள் இருவருக்கு கொரோனா ! ரயில், பஸ்ஸில் பயணம் செய்தோரை தொடர்பு கொள்ளுமாறு அவசர கோரிக்கை - News View

Breaking

Post Top Ad

Saturday, October 17, 2020

காங்கேசன்துறை கடற்படை வீரர்கள் இருவருக்கு கொரோனா ! ரயில், பஸ்ஸில் பயணம் செய்தோரை தொடர்பு கொள்ளுமாறு அவசர கோரிக்கை

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று 16ஆம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதனால் அவர்கள் தென்னிலங்கைக்கு பயணம் செய்த பொதுப் போக்குவரத்து விவரங்களை வெளியிட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன், அவற்றில் பயணம் செய்தோரைத் தொடர்புகொள்ளுமாறு கோரியுள்ளார். 

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இவர்களில் 21 வயதான பெண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு கொழும்பு நோக்கி தொடருந்தில் 3ம் வகுப்பு பெட்டியில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவர் முற்பகல் 11.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தை சென்றடைந்துள்ளார். 

பின்னர் அதேதினம் பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 4 மணிக்கு புறப்பட்டு காங்கேசன்துறை நோக்கி செல்லும் தொடருந்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து இரவு 11 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

மேலும் இதே கடற்படை முகாமைச் சேர்ந்த 31 வயதான ஆண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் செப்டெம்பர் 27ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் வெலிமடையில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்றுள்ளார். 

இவர் கடந்த ஒக்டோபர் 06ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு கண்டி நகரத்தை காலை 11 மணிக்கு சென்றடைந்துள்ளார். அங்கிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் 11.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

மீண்டும் அங்கிருந்து மாலை 6.50 மணிக்கு காங்கேசன்துறைக்கு செல்லும் தனியார் பேருந்தில் பயணித்து இரவு 7.40 மணிக்கு காங்கேசன்துறையை அடைந்துள்ளார். 

மேற்குறிப்பிட்ட தொடருந்து வண்டிகளில் 3ம் வகுப்பு பெட்டிகள் மற்றும் பேருந்துகளில் இக் கடற்படை உத்தியோகத்தர்களுடன் பயணித்தவர்கள் வட மாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணி நேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களது விபரங்களை அறியத்தரவும். 

பயணம் செய்தவர்களின் விவரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கோரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கோரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இந்நோய் எமது மாவட்டத்தில் பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமின்றி உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad