160 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா : குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் விஷேட அறிவித்தல்! - News View

Breaking

Post Top Ad

Saturday, October 17, 2020

160 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா : குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் விஷேட அறிவித்தல்!

(எம்.மனோசித்ரா) 

குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கு அனுப்ப முடியாமல் தூதரகத்தின் பராமரிப்பில் உள்ள காப்பகத்தில் நீண்ட காலமாக தங்க வைக்கப்பட்டுள்ள 160 க்கும் மேற்பட்ட புலம் பெயர் பெண் தொழிலாளர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. 

மேற்குறித்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டும் இடப்பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டும் இனி வரும் நாட்களில் எந்தவொரு புலம் பெயர் பெண் தொழிலாளரும் தூதரக காப்பகத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தூதரகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விஷேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தின் வேலை வாய்ப்புகள் மற்றும் நலன்புரி பிரிவின் பெரும்பாலான அதிகாரிகளின் சேவைக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. 

எனவே மேற்குறிப்பிடப்பட்ட காரணங்களினால் பணி புரியும் இடங்களில் ஏற்படும் முரண்பாடுகளைத் தொடர்ந்து தனது அனுசரணையாளருக்கு தெரியாது வீடுகளை விட்டு வெளியேறி தூதரகத்துக்கு வருவதனைத் தவிர்க்குமாறு அந்நாட்டிலுள்ள இலங்கை பணிப் பெண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

எனவே 25354633 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக தூதரகத்தை தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை அறியத் தரலாம். அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஊடாக முறைப்பாட்டை மேற்கொண்டு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம். 

மேலும் உங்களது அனுசரணையாளரிடம் (கபீலிடம்) தொடர்ந்தும் உங்களுக்கு பணி புரிய விருப்பம் இல்லாத போது, அதனை அனுசரணையாளருக்கு தெரியப்படுத்தி, ருமைதியாவில் அமைந்துள்ள மனித வள அதிகார சபையின் கீழ் இயங்கும் 'அமாலா மன்ஸில்' ஊடாக குவைத் அரசினால் பராமரிக்கப்படும் தொழிலாளர் காப்பகத்தில் சரணடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

மேற்குறிப்பிடப்பட்ட முறைகளைப் பின்பற்றாது பணி புரியும் இடங்களிலிருந்து வெளியேறுபவர்கள் தமது இருப்பிடத்தை இழப்பதோடு மீண்டும் தமது அனுசரனையாளரிடமோ அல்லது வேலை வாய்ப்பு முகவரிடமோ (ஏஜன்சி) திரும்பிச் செல்ல நேரிடும் அல்லது தனக்கான தங்குமிடத்தைத் தானே தேடிக் கொள்ள நேரிடும் என்பதனை அறியத்தருகிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad