ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஷ்கரிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் இலங்கை வாழ் முஸ்லிம்களைக் கேட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை 28.10.2020 வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் முஸ்லிம்களின் உயிர் மூச்சாக மதிக்கப்படும் இறைத்தூதர் முஹம்மது நபியை கேலி செய்ய அனுமதித்த பிரான்ஸின், உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஷ்கரிக்க வேண்டும்.
கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ள ஐரோப்பா, மத நிந்தனைகளைக் கண்டு மகிழ்ச்சியுறுவது கவலையளிக்கிறது.
பிரான்ஸில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் நடந்து கொண்ட விதம் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக்கள் குறித்தும் அந்நாடு கருத்திலெடுக்க வேண்டும்.
தங்களது உயிரை விடவும் இறைத்தூதர் முஹம்மது நபியை முஸ்லிம்கள் மேலாக மதிக்கின்றனர். இஸ்லாம் வலியுறுத்தும் மறுவுலக வாழ்வின் ஈடேற்றத்துக்கு முஹம்மது நபியின் "ஷபாஅத்" பரிந்துரை அவசியம் என்பதும் முஸ்லிம்களின் நம்பிக்கை.
இதற்காகத்தான் நாளாந்தமும் ஐவேளைத் தொழுகையிலும் நபி மீது ஸலவாத்துச் சொல்கிறோம்.
அருள்மறை விளக்காகத் திகழும் இத்தனை முக்கியம் வாய்ந்த இறைத் தூதரை ஐரோப்பா தொடர்ந்தும் கேலி செய்தே வருகிறது.
சிலுவை யுத்த தோல்வியாளர்களின் மன விகாரங்கள் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் வெளிப்படுவதாகவே முஸ்லிம் உலகம் இதைக் கருதுகிறது.
மனிதர்களிடையே மோதலைத் தூண்டி இரத்தத்தை ஓடச் செய்யும் இவ்வாறான கருத்துச் சுதந்திரங்கள் அவசியம்தானா இதுபற்றி ஐரோப்பா ஏன் சிந்திக்கவில்லை? சத்திய இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை சகிக்க முடியாதவர்களே இவ்வாறான இழி செயலைப் புரிகின்றனர்.
இதிலிருந்தாவது இஸ்லாம் வாளாலும் பலவந்தத்தாலும் பரப்பப்படவில்லை என்பதை ஐரோப்பா குறிப்பாக டென்மார்க் பிரான்ஸ் போன்ற நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
மிகப் பெரிய கலாசார மோதல்களுக்குத் தூபமிடும் இவ்வாறான இழி நோக்குடைய கருத்துச் சுதந்திரத்தை பிரான்ஸ் உடனடியாக நிறுத்துவது அவசியம்.
நிறுத்தும் வரைக்கும் அந்நாட்டின் உற்பத்திப் பொருட்களை முஸ்லிம் நாடுகள் தடை செய்துள்ளன. இதைப் பின்பற்றி இலங்கை முஸ்லிம்களும் பிரான்ஸின் பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும்.
மொழி நிறம் பிரதேசம் கடந்து மதத்தால் ஒன்றிணைந்த முஸ்லிம்களின் உணர்வுகள் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளதுதான் எமது பலம்.
கொரோனாவின் கொடிய அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது முஸ்லிம் உலகம் ஒன்று கூடிப் பிரான்ஸைக் கண்டிக்கின்றமை உயிரை விடவும் முஸ்லிம்கள் இறைத் தூதர் முஹம்மது நபியை நேசிக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துகிறது.” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment