புறாச் சண்டை கத்திக் குத்தில் முடிந்தது - இருவர் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 7, 2020

புறாச் சண்டை கத்திக் குத்தில் முடிந்தது - இருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

எறாவூர் பொலிஸ் பிரிவு ஹிதாயத்நகர் கிராமத்தில் வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த புறாச் சண்டை கத்திக் குத்தில் முடிந்ததில் கைது செய்யப்பட்டவர் உட்பட இருவர் காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை 07.10.2020 பிற்பகல் ஏறாவூர் - ஹிதாயத் நகர் கிராமத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்திச் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த எம். சியாம் (வயது 24) என்பவர் கத்திக் குத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகி முன்னதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதேவேளை இச்சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேக நபரான லாபிர் முஹம்மது ஸபீர் (வயது 25) எனும் நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது ஒருவரது வளர்ப்புப் புறாக்களை மற்றையவர் திருடிச் சென்று தனது வீட்டில் வைத்திருந்ததாகவும் அதனை நோட்டமிட்ட புறாவின் உண்மையான உரிமையாளர் அவற்றைக் கைப்பற்றுவதற்காக சென்ற பொழுது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த வாய்த்தர்க்கம் முற்றி கத்திக் குத்தாக மாறியுள்ளது. இவ்வேளையில் சியாம் என்பவரின் முதுகுப் புறத்தில் 6 தடவைகள் கத்திக் குத்து இடம்பெற்று அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கிடைக்கப் பெற்ற பொலிஸ் முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபரான ஸபீர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment