பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான திட்டங்கள் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கும் வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்படவிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 பிரச்சினையால் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எமது நாட்டில் மட்டுமன்றி உலகில் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 187 மில்லியன் பேர் தொழிலை இழந்துள்ளனர்.
ஏப்ரல் தாக்குதலினால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது. கோவிட்-19 இனால் நிலைமை மேலும் மோசமானது. இருந்தாலும் அரசாங்கம் வரிச்சலுகை பொதியொன்றை அறிமுகம் செய்து வரிகளை குறைத்தது. வருமான வரியை இரத்துச் செய்தது.
கடந்த காலத்தில் விலைக் கட்டுப்பாட்டு சட்டமொன்று இருந்தது. அதனை லலித் அதுலத் முதலி இரத்துச் செய்தார். தற்பொழுது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அமுலிலுள்ளது. விலைக் கட்டுப்பாட்டினூடாக விலைகளை கட்டுப்படுத்துவது கஷ்டம்.
சந்தையில் தரமற்ற முகக் கவசங்கள் விற்பனைக்குள்ளன. தனியார் நிறுவனமொன்று மருத்துவ பாதுகாப்பான முகக் கவசத்தை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்துள்ளது. அதற்கு சந்தைக்கு வாய்ப்பு வழங்க நாம் தலையீடு செய்துள்ளோம்.
நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தினூடாக வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான திட்டங்கள் முன்வைக்கப்படும் என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment