தேசிய பாதுகாப்பு பேரவைக்கு பூஜித் அழைக்கப்படாதது ஏன்? : அதிகபடியான தொலைபேசி பாவனை, கண்டி பெரஹெரவில் நடனமாடியமை - விளக்கம் கொடுத்தார் மைத்திரி - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

தேசிய பாதுகாப்பு பேரவைக்கு பூஜித் அழைக்கப்படாதது ஏன்? : அதிகபடியான தொலைபேசி பாவனை, கண்டி பெரஹெரவில் நடனமாடியமை - விளக்கம் கொடுத்தார் மைத்திரி

(எம்.எப்.எம்.பஸீர்) 

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை, பாதுகாப்பு பேரவை கூட்டங்களுக்கு அழைக்காமல் விட்டமைக்கு, அவர் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பொருத்தமில்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமையே காரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில் இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையிலேயே நேற்று சாட்சியம் அளிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தை குறிப்பிட்டதுடன், அது தொடர்பில் காரணங்களை அடுக்கினார். 

ஆணைக்குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலைமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ராஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையில், ஆணைக்குழுவின் உறுப்பினர் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோக்கி, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை ஏன் பாதுகாப்புகுழு கூட்டங்களில் பங்கேற்பதை தடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன, 'தடை செய்தேன் என்பதை விட அவரது நடவடிக்கைகள் காரணமாக வர வேண்டாம் என கூறினேன் என்பதே பொருந்தும். பூஜித் ஜயசுந்தர தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. இவ்வாறான பின்னணியில் பாதுகாப்புப் பேரவைக்கு வந்த பூஜித் ஜயசுந்தர இரு கையடக்கத் தொலைபேசிகளை வைத்துக்கொண்டு எப்போதும் அதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருப்பார். நான் இது தொடர்பில் இரு முறை பாதுகாப்பு குழு கூட்டங்களின் பின்னர் தனிப்பட்ட ரீதியில் அவரை எச்சரித்திருந்தேன். 

பொலிஸ்மா அதிபர் ஒரு போதும் அந்த பதவிக்குரிய கெளரவத்தை பாதுகாக்கவில்லை. ஒரு முறை கண்டி பெரஹெரவுக்கு சென்று அவர் நடனமாடினார். இது ஊடகங்களிலும் வெளியானதை அடுத்து பெரும் விமர்சனம் இருந்தது. பொலிஸ் சீருடையில் அவர் இவ்வாறு நடனமாடியிருந்தார். இந்நிலையில் இரு நாட்களின் பின்னர் நான் பூஜித் ஜயசுந்தரவுக்கு கதைத்தேன். 

அப்போது 'பூஜித் தியவடன நிலமே, பெரஹெரவுக்கு நாட்டியக்காரர்கள் இல்லை என ஏதும் உங்களுக்கு கூறினாரா? என அப்போது நான் அவரிடம் கேட்டேன். அதேபோல் மாத்தறை பகுதியில் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு விஷேடமாக சொற்பொழிவாற்றிவிட்டு, அங்கு ஆசிரியர்களிடம் கேள்விகளை கேட்டு அது தொடர்பிலும் விமர்சங்களுக்கு அவர் முகம் கொடுத்தார். 

இந்நிலையில் அப்போதைய சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஒன்றினை கூட ஆரம்பித்தார். 

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு விஷேட அதிரடிப்படை, போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு போதைப் பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தகவல்களை வழங்குவோருக்கு அதற்கான சன்மானத்தை வழங்க உரிய பணத் தொகையை வழங்க பூஜித ஆர்வம் காட்டவில்லை. 

இவ்வாறான நிலையிலேயே நான் பூஜித்தை பாதுகாப்பு பேரவை கூட்டங்களுக்கு வர வேண்டாம் என கூறினேன். அதற்கு பதிலாக சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரதனவை பாதுகாப்பு குழு கூட்டங்களுக்கு அழைத்தேன். அவருக்கு அங்கு இடம்பெறும் விடயங்களை பூஜித் ஜயசுந்தரவுக்கு கூற முடியும். 

பூஜித் ஜயசுந்தரவின் நடவடிக்கைகள் தொடர்பில் நான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரையாடினேன். எனது வீட்டில் ரணில் விக்ரமசிங்க, தலதா அத்துகோரள, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் அதில் கலந்துகொண்டிருந்தனர். 

அதன்போது நான் பூஜித் ஜயசுந்தரவை தொலைபேசியில், எனது வீட்டுக்கு அழைத்து பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் பதவியின் கெளரவத்தை பாதுகாத்துக் கொள்ள ஆலோசனை அளித்தேன். 

உண்மையில் 19 ஆவது திருத்த சட்டத்தின் பின்னர் பொலிஸ்மா அதிபரை நேரடியாக பதவி விலக்க வாய்புக்கள் இருக்கவில்லை. பாராளுமன்ற குற்றப்பிரேரணை ஒன்றினூடகவே அவரை பதவி விலக்க முடியுமாக இருந்தது. எனினும் அவரை பதவி விலக்குவதை விட குறைபாடுகளை திருத்தி முன்னேறிச் செல்வதே நோக்கமாக இருந்தது. 

பூஜித் பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் நடாத்தும் பொலிஸ் அதிகாரிகளுடனான கூட்டங்களில் அவர் மட்டுமே தொடர்ந்து பேசுவார். எனக்கு சில பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் அழைத்து அதனை கூறுவர். கூட்டத்தில் எமக்கு பேச சந்தர்ப்பமே இல்லை. முழுகால நேரத்திலும் அவரே பேசிக் கொண்டிருந்தார் என அவர்கள் முறையிடுவர். 

இன்னொரு சம்பவத்தையும் கூற வேண்டும். பொலன்னறுவையில் கடற்படையினர் ஒரு இசைக் கச்சேரியை நடாத்தியிருந்தனர். நானும் அதில் கலந்துகொண்டிருந்தேன் எனக்கு பின் வரிசையில் பூஜித்தும் இருந்தார். அப்போது இரகசியமாக என்னிடம் 'சேர்... நானும் பாடல் ஒன்று பாடவா?' என கேட்டார். நானும் ஆம் பூஜித்.. பாடுங்கள் என அனுமதித்தேன். அவர் மேடைக்கு ஏரி பாடல் பாட ஆரம்பித்தார். 

சாதாரணமாக பிரசித்த பாடகர்கள் இசைக் கச்சேரிகளில் தொடர்ச்சியாக மூன்று பாடல்களை பாடிவிட்டு இறங்குவதை நாம் பார்த்துள்ளோம். அதேபோல் அவரும் மூன்று பாடல்களுடன் இறங்குவார் என நான் எதிர்ப்பார்த்தேன். எனினும் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என பூஜித் தொடர்ந்து பாடல்களை பாடிக்கொண்டு சென்றார். 

அங்கு கூச்சல், ஹூ சப்தங்கள் வருவதற்கு முன்னர் நான் அங்கிருந்து வெளியேற நினைத்து எழுந்து சென்றேன். நான் வாகனம் அருகே செல்வதை பார்த்துவிட்டு, பூஜித் மேடையிலிருந்து இறங்கி எனது கார் அருகே வந்தார். வந்தவர் 'சேர்.. எனது பாட்டு எப்படி?' என வினவினார். அப்போது நான் 'உங்கள் பாட்டு பிரமாதம்.. அதனால் தான் வீட்டுக்கு போகின்றேன்..' என கூறிவிட்டு நான் சென்றேன். 

இவையெல்லாம் பூஜித் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு ஏற்றால் போல் நடக்கவில்லை என்பதற்கான சான்றுகள். அத்துடன் ஒரு போதும் பூஜித் பாதுகாப்பு பேரவையில் எந்த உருப்படியான முன்வைப்புக்களையும் செய்யவும் இல்லை. என மைத்திரிபால சிறிசேன சாட்சியமளித்தார்.

No comments:

Post a Comment