பதவி பணத்திற்காக நான் இந்த செயலை செய்யவில்லை எனக்கு வாக்களித்த மக்களின் நலன் சார்ந்து சிந்தித்தே முடிவு எடுத்தேன் - அரவிந்த குமார் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

பதவி பணத்திற்காக நான் இந்த செயலை செய்யவில்லை எனக்கு வாக்களித்த மக்களின் நலன் சார்ந்து சிந்தித்தே முடிவு எடுத்தேன் - அரவிந்த குமார் எம்.பி.

20ஆவது திருத்தத்துக்கு வாக்களித்தமைக்காக என்னைச் சிலர் வசைபாடி திரிவது எனக்கு நன்கு தெரியும். இருந்தும் நான் அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால் என் பின்னால் நின்று கதைப்பவர்கள் போல் பதவிக்காகவோ அல்லது பணத்திற்காகவோ நான் இந்த செயலை செய்ய வில்லை. மாறாக எனக்கு வாக்களித்த மக்களின் நலன் சார் விடயங்கள், மேம்பாட்டு விடயங்கள் என்பவற்றை சிந்தித்தே நான் இந்த முடிவினை எடுத்தேன் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்த குமார் தெரிவித்தார்.

அடுத்து வரும் பல ஆண்டுகளுக்கு இன்றைய அரசாங்கமே நிச்சயம் ஆட்சியில் இருக்கும். எனவே அந்த ஐந்து அல்லது பத்து வருடங்கள் எதிர்க் கட்சியிலிருந்து என்னால் எனது மக்களுக்கு எந்தவிதமான சேவையையும் செய்ய முடியாது. இது இன்று எதிர்க்கட்சியில் இருக்கின்ற அனைவருக்குமே தெரியும்.

அவர்களுக்கும் இதேநிலைதான். எனவே இதனை நன்கு உணர்ந்து எனது மக்களின் மேம்பாட்டிற்காக நான் இத்தகைய முடிவினை எடுத்தேன்.

என்னைப் பொறுத்தவரையில் இந்த விடயத்தில் எவராவது என்னைத் தூற்றி வசைபாடினால் அது பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் நான் எடுத்த முடிவு நல்ல ஒரு முடிவு என்பது எனக்கு தெரியும். அது நான் சார்ந்த கட்சிக்கும், நான் சார்ந்த கூட்டணிக்கும், நான் சார்ந்த பதுளை மாவட்ட மக்களுக்கும் நன்கு தெரியும். எனவே நல்லதொரு முடிவை எடுத்ததற்காக நான் ஒருபோதும் கவலைப்பட மாட்டேன்.

எனது மக்களுக்கான சேவை மேலும் உத்வேகத்துடன் மேலும் பல மடங்கு தொடரும். அதற்கு அரசாங்கத்தின் உதவிகள் பெறப்படும். எனக்கு என நான் ஒருபோதும் பதவி தருமாறு அல்லது பணம் தருமாறு கேட்டதே இல்லை.

எனக்குத் தேவையுமில்லை, இறைவன் எனக்கு சகல வசதிகளையும் தந்துள்ளார். ஆனால் அவ்வாறு பதவி, பணம், அந்தஸ்து எனப் பல உதவிகளை கேட்ட பலர் கடந்த அரசாங்கங்களில் இருந்து இரட்டை வேடம் பூண்ட விடயங்கள், அவர்கள் யார் என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியும் எனவும் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment