கட்சி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அரவிந்தகுமாருக்கு தடை, விளக்கமளிக்க 14 நாட்கள் அவகாசம் - இராதாகிருஷ்ணன் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

கட்சி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அரவிந்தகுமாருக்கு தடை, விளக்கமளிக்க 14 நாட்கள் அவகாசம் - இராதாகிருஷ்ணன் அறிவிப்பு

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னிணியின் அரசியல் பிரிவுத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அவருக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்குவதற்கும், அவர் வழங்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (25) ஹட்டனில் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களிப்பதென மலையக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன தீர்மானித்திருந்தன. இந்நிலையில் இம்முடிவை மீறி சட்டமூலத்துக்கு ஆதரவாக அரவிந்தகுமார் எம்.பி., வாக்களித்தது தொடர்பில் மத்திய குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

கொவிட்-19 தாக்கத்தால் சுமார் 60 பேர் வரையே கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். பதுளை மாவட்ட உறுப்பினர்களை முக்கியமாக அழைத்திருந்தோம்.

அந்த வகையில் இது விடயம் தொடர்பில் அரவிந்தகுமார் எம்.பியிடம் விளக்கம் கோருவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 14 நாட்களுக்குள் அவர் உரிய விளக்கத்தை முன்வைக்க வேண்டும். மத்திய செயற்குழுவின் இந்த முடிவு செயலாளர் ஊடாக அரவிந்தகுமார் எம்.பிக்கு அனுப்பி வைக்கப்படும்.

14 நாட்களுக்கு பின்னர் மத்திய குழுவும், கவுன்ஸிலும் மீண்டும் கூடும். அவர் விளக்கமளித்திருக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

அதுவரையில் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் அவர் ஈடுபடக்கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட நிலைப்பாடுகள் இருக்கலாம், ஆனால் கட்சி, கட்டமைப்பு என வரும்போது கூட்டாக எடுக்கும் முடிவை எடுத்தாக இருக்க வேண்டும் என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment