சஹ்ரானை கைது செய்யுமாறு மைத்திரிபால ஒருபோதும் உத்தரவிடவில்லை : ஹேமசிறி பெர்னாண்டோ - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 14, 2020

சஹ்ரானை கைது செய்யுமாறு மைத்திரிபால ஒருபோதும் உத்தரவிடவில்லை : ஹேமசிறி பெர்னாண்டோ

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிமை கைது செய்யுமாறு 2019 ஜனவரி தேசிய பாதுகாப்பு பேரவையின் (NSC) கூட்டத்தில் அறிவுரைகளை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தாலும் அவர் ஒருபோதும் அத்தகைய அறிவுரைகளை வழங்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (13) சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதேவேளை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் சார்பில் ஆஜரான சாமில் பெரேரா சாட்சியிடம், தேசிய பாதுகாப்பு பேரவைக் கூட்டம் 2019 பெப்ரவரி 19 இல் நடைபெற்றதற்குப் பின் ஏப்ரல் 22 வரை ஏன் கூட்டப்படவில்லை என வினவினார்.

அதற்கு பதிலளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ “அதற்கான காரணம் எனக்குத் தெரியாது” என்றார்.

“தேசிய பாதுகாப்பு பேரவையை கூட்டும் முடிவை வழக்கமாக ஜனாதிபதியே எடுப்பார். அவர் சொன்னதை மட்டும் நான் செய்தேன். அதை நடத்தாததற்கான காரணம் என்னவென எனக்குத் தெரியாது” என்றார்.

சஹ்ரான் உட்பட ஒரு குழு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தக்கூடியதான தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை என வினவும்போது புலனாய்வு குறித்த தகவல் வழக்கம்போல் தேசிய புலனாய்வு சேவையின் (SIS) பணிப்பாளரால் வழங்கப்பட்டது என்று ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.

“சட்டப் பின்னணியின் படி சில தகவல்கள் பற்றி அமைச்சின் செயலாளரால் அமைச்சருக்கு அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் பின்னர் நானும் தேசிய புலனாய்வு சேவையின் பணிப்பாளரும் புலனாய்வு குறித்த தகவலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க வேண்டும் என்ற உடன்பாட்டுக்கு வந்தோம்” என்றார்.

தினக்குரல்

No comments:

Post a Comment