காங்கேசன்துறைக்கு மாற்றப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

காங்கேசன்துறைக்கு மாற்றப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன

(எம்.எப்.எம்.பஸீர்) 

பொலிஸ் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன வடக்கின், காங்கேசன்துறை பொலிஸ் வலயத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். 

இதற்கான உத்தரவை சுயாதீன தேசிய பொலிஸ் ஆணைக்குழு பிறப்பித்துள்ளது. 

ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக, அவரை வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இவ்வாறு காங்கேசன்துறை பொலிஸ் வலயத்துக்கு இடமாற்றுவதாக அந்த இடமாற்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சளர் பதவியில் பதில் கடமைகளை செய்யும் பொறுப்பு, பொலிஸ் ஒழுக்காற்று மற்றும் சட்டப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரிதொரு அறிவித்தல் ஊடாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் சகோதரர் ரியாஜ் பதியுத்தீன் விவகாரத்தில், கைதின் போதும், விடுதலையின் பின்னரும் பொலிஸ் பேச்சாளராக ஜாலிய சேனாரத்ன வெளியிட்ட கூற்றுக்கள் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டன. 

இது தொடர்பில் பாராளுமன்றில் உள்ளக பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் அதிருப்தி வெளியிட்டதுடன் பொலிஸ் பேச்சாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே, அவரின் இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் இதே ரியாத் பதியுதீன் விடுவிப்பு விவகாரத்தை மையப்படுத்தி, தற்காலிகமாக சி.ஐ.டி. யிலிருந்து மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்துக்கு மாற்றப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்க, அங்கிருந்து அவர் சி.ஐ.டி. பிரதானியாக பதவி ஏற்க முன்னர் வகித்த காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கே மீளவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனைவிட பொலிஸ் ஊடகப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ஈ.எம்.யூ.வி. குணரத்ன, சூழல் பாதுகாப்பு பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன் பொலிஸ் சுற்றுலா பிரிவின் பிரதானியாக இருந்த கே.வி.டி.ஏ.ஜே.கரவிட்ட பொலிஸ் அபிவிருத்தி பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

எவ்வாறாயினும் பொலிஸ் தகவல் மற்றும் ஊடகப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்து கடந்த 18 நாட்களுக்கு முன்னர் வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டிருந்த லால் செனவிரத்ன, தற்போது பொலிஸ் சுற்றுலா பிரிவுக்கு பொறுப்பாக இடமாற்றப்பட்டுள்ளார். 

அத்துடன், தற்காலிகமாக மேல் மாகாண வடக்குக்கு பொறுப்பாக கடமையாற்றிய முன்னாள் சி.ஐ.டி. பிரதானி நுவன் வெதிசிங்க காலிக்கு மாற்றப்பட்டதால் ஏற்பட்ட மேல் மாகாண வடக்கு பிரிவின் வெற்றிடத்துக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.என்.கே.டி. விஜய ஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன் இதுவரை காலிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய ஏ.பி.ஜே. சந்ரகுமார பொலிஸ் தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கும், பொலிஸ் நலன்புரி பிரிவின் பிரதானியாக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்த மனித வள முகாமைத்துவ பிரிவுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். 

அத்துடன் வெற்றிடமாகியுள்ள வன்னி பிராந்தியத்துக்கு பொறுப்பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர குமார நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment