பாரிய ஆர்ப்பாட்டங்களை அடுத்து கிரிகிஸ்தான் தேர்தல் முடிவை அந்நாட்டு தேர்தல் நிர்வாகம் ரத்துச் செய்துள்ளது.
புதிய தேர்தலை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்குள் ஊடுருவி பொலிஸாருடன் மோதலில் ஈடுப்பட்டனர். இந்த பதற்றத்தால் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அரசியல் சக்திகள் சட்டவிரோதமான முறையில் அதிகாரத்தை கைப்பற்ற முயல்வதாக ஜனாதிபதி சூரொன்பாய் ஜீபெகொவ் குற்றம்சாட்டி இருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட 16 கட்சிகளில் நான்கு மாத்திரமே பாராளுமன்றம் நுழைவதற்கு தேவையான 7 வீத வாக்கு எல்லையை பெற்றுள்ளன. அதில் மூன்று ஜனாதிபதிக்கு நெருக்கமான கட்சிகளாகும்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தலைநகர் பிஷ்கக்கில் உள்ள அலா தூ சதுக்கத்தில் ஒன்றுதிரண்ட சுமார் 5000 பேர் தேர்தல் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பூச்சடிக்கப்பட்டபோது பொலிஸாருடன் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் தேர்தலுக்குப் பின்னரான ஆர்ப்பட்டங்களால் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கும் சூழலில் கிரிகிஸ்தான் பிரதமர் குபட்பக் பொரொனோவ் பதவி விலகியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அவசரக் கூட்டத்தில் பொரொனோவ்வுக்கு பதில் எதிர்க்கட்சியின் சடிர் சபரோவ் நாட்டின் பதில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு தினத்திற்கு முன்னரே அவர் சிறையில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் விடுவிக்கப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி ஜீன்பெகொவ் தொடர்ந்து பதவியில் இருந்தபோதும் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கிரிகிஸ்தானில் அரசியல் எழுச்சி இடம்பெறுவது வழக்கமாகும். கடந்த 15 ஆண்டுகளில் அந்நாடு இரண்டு எழுச்சிகளை சந்தித்துள்ளது. ஊழல் அரசியல் வகுப்பு மற்றும் தேர்தல் மோசடிக்கு எதிராக 2005 மற்றும் 2010 ஆண்டுகளில் தீவிர மக்கள் போராட்டம் வெடித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment