மைத்திரி பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்காமையே குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாமல் போனதற்கான காரணம் - ஹேமசிறி சாட்சியம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

மைத்திரி பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்காமையே குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாமல் போனதற்கான காரணம் - ஹேமசிறி சாட்சியம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஏப்ரலில் ஒரு பயங்கரவாதத் தாக்குதலுக்கான சாத்தியம் குறித்து அறிந்திருந்திருக்கலாம். ஆனாலும் அவர் நாட்டை விட்டுச் சென்றார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கூறினார்.

தான் எங்கிருந்தாலும் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க நீர் தாரைகளைப் பயன்படுத்த தனது அனுமதியைப் பெற வேண்டும் என பொலிஸ் மற்றும் கலகம் அடக்கும் படையினருக்கு மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியிருந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (13) சாட்சியமளிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இவ்வாறு கூறினார்.

மைத்திரிபால சிறிசேன நாட்டில் இல்லாத போதும் 2019 ஏப்ரல் அவரது வெளிநாட்டு சுற்றுலாவின் போதும் பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாததே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாமல் போனதற்கான பிரதான காரணங்கள் எனவும் ஹேமசிறி பெர்னாண்டோ கூறினார். 

மைத்திரிபால சிறிசேன தான் வெளிநாட்டில் இருக்கும்போது பதிலாக அமைச்சர் ஒருவரை ஒருபோதும் நியமிக்கவில்லை என்றார். இதற்கு முன்னைய சம்பவங்கள் சிலவற்றைக் குறிப்பிடலாம்.

எனக்கும் மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் தனது அனுமதி பெறாமல் தான் நாட்டில் இல்லாவிடினும் கூட ஆர்ப்பாட்டப் பேரணிகள் மீது நீர் தாரையைப் பிரயோகிக்க வேண்டாமென கண்டிப்பாக அறிவுறுத்தியிருந்தார் என ஹேமசிறி பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கலகம் அடக்கும் படையினர் ஜனாதிபதி செயலகம் முன்பாக நடந்த ஓர் ஆர்ப்பாட்டம் மீது நீர் தாரையைப் பிரயோகித்தனர். 

அப்போது மைத்திரிபால சிறிசேன என்னை தொலைபேசியில் அழைத்து அவ்வாறு செய்ய யார் அறிவுறுத்தியது எனக் கேட்டார். பின் நான் அதை அறிந்திருக்கவில்லை, பின் நான் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு அழைத்தேன். அவரும் இது குறித்து அறிந்திருக்கவில்லை” என்றார்.

பின்பு மைத்திரிபால சிறிசேன மூத்த பொலிஸ் அதிகாரிகளை ஒரு கூட்டத்துக்கு அழைத்து பூஜித் ஜயசுந்தரவால் அல்லது என்னால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைச் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட பின் எமது அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றார். 

அந்தக் கூட்டத்தில் அதிகாரிகளை குற்றம் சாட்டியதுடன் நீர் தாரைகளை ஆர்ப்பாட்டங்களின் போது எனது அனுமதியின்றி பிரயோகிக்க வேண்டாமென அறிவுறுத்தினார் என ஹேமசிறி பெர்னாண்டோ கூறினார்.

மைத்திரிபால சிறிசேன    தேசிய பாதுகாப்பு பேரவையைக் கூட்ட போதுமான நேரம் எனக்குத் தரவில்லை அதுவும் பாதுகாப்பு நிலைமையில் பாதிப்பை ஏற்படுத்தியது என ஹேமசிறி பெர்னாண்டோ மேலும் கூறினார்.

தினக்குரல்

No comments:

Post a Comment

Post Bottom Ad