சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவக்கு 20 வருட கால கடூழிய சிறைத் தண்டனை வழங்கினார் நீதிபதி இளஞ்செழியன் - நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமையினால் திறந்த பிடியானையும் பிறப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 14, 2020

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவக்கு 20 வருட கால கடூழிய சிறைத் தண்டனை வழங்கினார் நீதிபதி இளஞ்செழியன் - நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமையினால் திறந்த பிடியானையும் பிறப்பிப்பு

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரங்கள் பகுதியில் வீட்டின் கூரையை கழற்றி உட் சென்று 16 வயதிற்கு குறைந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறித்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

கிண்ணியா - சூரங்கள் பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஏழாம் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2012 எட்டாம் மாதம் 21 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சிறுமி உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அவரது வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் இறங்கி குறித்த வயோதிபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமாக்கி பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து இரத்த பரிசோதனை DNA செய்தபோது பிறந்த பெண் குழந்தையின் தந்தை 99.999 வீதம் எதிரியாகிய வயோதிபர் என DNA அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை இரசாயன பகுப்பாய்வாளர் நீதிமன்றில் ஆஜராகி நேரடியாக சாட்சியம் அளித்து எதிரிதான் பிறந்த குழந்தைக்கு 99.999 வீதம் தந்தை என உறுதிப்படுத்தி சாட்சியமளித்துள்ளார்.

இந்நிலையில் 16 வயதிற்கு குறைந்த வயது சிறுமி நீதிமன்றில் சாட்சியமளித்த போது எதிரி மன்றில் ஆஜராகி இருந்தார். அதன் பின்னர் தலைமறைவாகி விட்டார்.

2019 ஆம் ஆண்டு 8ம் மாதம் எட்டாம் திகதி 22 ஆம் இலக்க 1995ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட தண்டனைச் சட்டத்தின் கோவை பிரிவு 364 (02) உ பிரிவின் கீழ் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளையை நியதிச்சட்ட கற்பழிப்பு புரிந்ததாக 2019 ஆம் ஆண்டு எட்டாம் மாதம் எட்டாம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் குற்றப் பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்று இன்றைய தினம் (14) இவர் குற்றவாளி என தீர்ப்பு பகிரங்கமாக திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டப்பட்டது.

இருந்தபோதிலும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட குறித்த நபர் கடந்த சில வழக்கு தவணைகளுக்கு தொடர்ச்சியாக சமூகமளிக்காமையால் எதிரி இன்றி வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு இன்றைய தினம் இவரின் குற்றத்திற்கான தீர்ப்பு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டப்பட்டது.

குறித்த எதிரி நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் சமூகமளிக்காதமையினால் அவருக்கு திறந்த பிடியானை பிறப்பிக்கப்பட்டது.

அந்த குற்றவாளிக்கு எதிரான "திறந்த பிடியானை பிரதி" பொலிஸ்மா அதிபர் கிழக்கு மாகாணம், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், உதவிப் பொலிஸ்மா அதிபர் திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் கட்டுப்பாட்டாளர், குடிவரவு குடியகல்வு திணைக்களம் கொழும்பு ஆகியோருக்கு பிடியாணை பிரதிகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,200,000 ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறும் அதனை வழங்காவிட்டால் 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

அத்துடன் அரச செலவாக 3 குற்றச்சாட்டிற்கும் தலா 25,000 ரூபாய் வீதம் 75,000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் 18 மாத கால கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment