தனிமைப்புடுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் அரச வைத்தியசாலைகளில் க்ளினிக் (சிகிச்சை) மூலம் மருந்துகளை பெற்றுக் கொள்ளுவோருக்கு அவற்றை வீடுகளுக்கே சென்று வழங்கும் வேலைத்திட்டத்தை சுகாதார சேவைகள் பிரிவு நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் எஸ். ஸ்ரீதரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும், அரச வைத்தியசாலைகளில் க்ளினிக் (சிகிச்சை) மூலம் பெற்றுக் கொள்ளும் மாதம் ஒன்றுக்கு போதுமான மருந்துகள் தம்மிடம் இல்லாத நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்குவதற்காக இலங்கை தபால் சேவையுடன் இணைந்து கூட்டு வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.
இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக நாளை (2020.10.27) தொடக்கம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு மேலதிகமாக களுத்துறை, குருநாகல் மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் க்ளினிக் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளும் நோயாளர்களுக்கு மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி ஆரம்பமாகவுள்ளது.
இந்த மருந்துகளை நோயாளர்களுக்கு சென்று வழங்கவதாயின் நோயாளர்கள் குடியிருக்கும் இடத்தின் முகவரியும் தொலைபேசி இலக்கத்தையும் வழங்குவது அவசியமாகும். தமது க்ளினிக் சிகிச்சை புத்தகத்துடன் சரியான முகவரியை வழங்கவில்லையாயின் தொலைபேசி மூலம் நீங்கள் மருந்துகளை பெற்றுக் கொள்ளும் வைத்தியசாலைக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல்களை பூரணப்படுத்துங்கள்.
அப்பொழுது உங்களது வைத்தியசாலை பணியாளர்கள் உங்களது மருந்து பொதிகளை தயார் செய்து முகவரி, தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு தபால் அலுவலகங்களில் ஒப்படைப்பதுடன் தபால்களை விநியோகிக்கும் ஊழியர்கள் மூலம் உங்களது வீடுகளுக்கே கொண்டு வந்து ஒப்படைப்பார்கள்.
வைத்தியசாலைகளுக்கு தகவலை வழங்கும் போது உங்கள் பிரதேசத்தில் உள்ள குடும்ப சுகாதார சேவை அதிகாரி, கிராம உத்தியோகத்தர்களினதும் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது பொருத்தமானதாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் க்ளினிக் சிகிச்சை சேவையை முன்னெடுப்பதற்காக நோயாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தபால் திணைக்களத்தினால் நிறைவேற்றப்படும் பயனுள்ள செயற்பாட்டை வெகுவாக பாராட்டுகின்றோம்.
No comments:
Post a Comment