எச்சரிக்கை மிக்க மூன்றாவது வாரம் ஆரம்பம் : நேற்று 47 புதிய தொற்றாளர்கள் பதிவு - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

எச்சரிக்கை மிக்க மூன்றாவது வாரம் ஆரம்பம் : நேற்று 47 புதிய தொற்றாளர்கள் பதிவு

(எம்.மனோசித்ரா) 

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டு மூன்றாம் வாரம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் நாட்டின் பல பிரதேசங்களிலும் நேற்றும் தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டனர். நீர்கொழும்பு, கொழும்பு துறைமுகத்திலுள்ள நிறுவனம், புறக்கோட்டை மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டபிள்யூ.எஸ்.ஓ நிறுவனங்கள் என பல பகுதிகளிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய நேற்று திங்கட்கிழமை மினுவாங்கொடை கொத்தனியுடன் தொடர்புடைய 47 பேர் இனங்காணப்பட்டனர். இவர்களில் நால்வர் தொழிற்சாலை ஊழியர் அல்லது தொடர்புடையவர் (தனிமைப்படுத்தல் நிலையங்களிலுள்ளவர்கள்) ஆவர். ஏனைய 43 பேர் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியோராவர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமை மினுவாங்கொடை தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2122 ஆக உயர்வடைற்துள்ளது.

நீர்கொழும்பு 
நீர்கொழும்பு நகரசபைக்குட்பட்ட வர்த்தக கட்டட தொகுதியில் ஆடை விற்பனை செய்யும் நபரொருவருக்கும் அவரது மனைவிக்கும் கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த கட்டட தொகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு பிரதேச சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வர்த்தக கட்டட தொகுதியில் வியாபாரம் செய்யும் 100 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த விற்பனையாளர் அண்மையில் திவுலபிட்டியில் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுகம் 
கொழும்பு துறைமுகத்தில் யாரும் தொற்றுக்குள்ளாகவில்லை என்று துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார். 

கொழும்பு முறைமுகத்திற்குள் காணப்படுகின்ற பிரிதொரு நிறுவனத்தின் ஊழியர்கள் ஐவருக்கே தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. 

அந்நிறுவனத்தில் தொழில் புரியும் 1000 ஊழியர்களுக்கு முன்னெடுத்த பரிசோதனையில் இவ்வாறு ஐவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.

விஷேட பரீட்சை மண்டபம் 
கம்பஹா மாவட்டத்தில் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவியொருவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, வைத்தியசாலையிலிருந்து பரீட்சை எழுதுவதற்கான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த மாணவி பரீட்சை எழுதிய மண்டபத்திலிருந்த ஏனைய 160 பரீட்சாத்திகளுக்காக விஷேட பரீட்சை மண்டபம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - 4 ஆம் குறுக்குத்தெரு 
கொழும்பு - 4 ஆம் குறுக்குத்தெரு, புறக்கோட்டையில் வர்த்தகர்கள் நால்வருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த நால்வருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.

மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் புறக்கோட்டையில் வியாபாரம் செய்வது கண்டறியப்பட்டதையடுத்து இவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும், இவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.

No comments:

Post a Comment