அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகிறது - இரா. சம்பந்தன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 21, 2020

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகிறது - இரா. சம்பந்தன்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் குறித்த இரண்டு நாள் விவாதம் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில் 20 ஆவது திருத்தம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள், நீதிபதிகள் போன்றோரை நியமித்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றின் அதிகாரம் ஒருவருக்கு வழங்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என் குறிப்பிட்ட இரா.சம்பந்தன் நீதித்துறை சுதந்திரமாக செயற்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

அத்தோடு ஒரு ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கான எந்தவொரு ஆணையும் மக்களிடமிருந்து பெறப்படவில்லை என்றும் இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆவது திருத்தத்தினை எதிர்ப்பதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சரியான கொள்கைகளின் அடிப்படையில் தங்கள் முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்த இரா.சம்பந்தன், இந்த நாட்டில் மக்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசியலமைப்பு 1994 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ் மக்கள் ஒரு புதிய அரசியலமைப்பிற்கான ஆணையை தொடர்ந்து வழங்கியுள்ளனர் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பிற்கு தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களின் ஒருமித்த கருத்தும் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள இரா.சம்பந்தன், இல்லையென்றால் அதை தாங்கள் நிராகரிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment