20ஆவது திருத்தச் சட்டம் நாட்டை மீண்டும் இருள் சூழ்ந்த யுகத்திற்கே அழைத்துச் செல்லும் - ராஜித எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 21, 2020

20ஆவது திருத்தச் சட்டம் நாட்டை மீண்டும் இருள் சூழ்ந்த யுகத்திற்கே அழைத்துச் செல்லும் - ராஜித எச்சரிக்கை

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சட்டவாக்கத் துறையினதும், நீதித் துறையினதும் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு நிறைவேற்றுத் துறைக்கு வழங்குவதால் நாட்டில் அதிகார சமநிலையற்ற தன்மையே உருவாகும், எனவே 20ஆவது திருத்தச் சட்டம் நாட்டை மீண்டும் இருள் சூழ்ந்த யுகத்திற்கே அழைத்துச் செல்லும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அரசியல் அமைப்பு பேரவை நீக்கப்பட்டு பாராளுமன்ற பேரவை உருவாக்கப்படுவது மிகவும் அபாயகரமானது. அதிகாரத்தை ஒருவருக்கு பெற்றுக் கொடுப்பதன் மூலம் அவரும் நாசமாவதுடன் நாடும் நாசமாகும். இதுதான் அதிகாரம் கிடைக்கும் போது நடைபெற்றது என்பதை வரலாற்றை பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும்.

ஜனாதிபதியின் அதிகாரம் அதிகரிக்கப்படுவதால் 1990 ஆம் ஆண்டு முதல் செய்து கொண்டுவரப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் மீண்டும் பின் செல்லும். மக்கள் வெற்றி கொள்வதுதான் நாட்டின் ஜனநாயகமாகும். 

ஜனநாயகத்தின் மூலம் மக்கள் சுதந்திரம் உருவாகும். அதனை உருவாக்குவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் மூன்று துறைகள் உள்ளன. சட்டவாக்கம், நீதித்துறை, நிறைவேற்றுத்துறை ஆகியவற்றின் மூலம்தான் ஓர் அரசு கட்டியெழுப்பப்படும். இந்த மூன்றுத்துறையில் ஒருத்துறையை மாத்திரம் தூக்கி நிறுத்தினால் சமநிலையுடன் பயணிக்க முடியாது. 

அரசியலமைப்பில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு முன்னோக்கிக் கொண்டு செல்லப்படும் என்றே தேர்தல் காலத்தில் மக்களுக்கு வாக்குறுதியாகும். பின்னோக்கி செல்ல அல்ல. 19 ஆவது திருத்தச் சட்டத்தில் மூலம் நாம் செய்த தவறுகளையும் சரி செய்து முன்னோக்கி பயணிப்பதற்கு பதிலாக இருள் சூழ்ந்த யுகத்திற்கு செல்வதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் அவர் இதன்போது கூறினார்.

No comments:

Post a Comment