12 பேர் எதிராகவும், 4 பேர் ஆதரவாகவும் வாக்களித்ததால் ஏறாவூர் நகர சபையின் 3வது வருட பாதீடு தோல்வி - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

12 பேர் எதிராகவும், 4 பேர் ஆதரவாகவும் வாக்களித்ததால் ஏறாவூர் நகர சபையின் 3வது வருட பாதீடு தோல்வி

ஏ.எச்.ஏ. ஹூஸைன் 

ஏறாவூர் நகர சபை ஒன்றுகூடிய வேளையில் அதன் 3வது வருட பாதீடு சபையின் விஷேட அமர்வில் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித்தினால் சமர்ப்பிக்கப்பட்டபொழுது அது தோல்வி கண்டது.

ஏறாவூர் நகர சபையின் விஷேட அமர்வும் பாதீடு சமர்ப்பிப்பும் திங்கட்கிழமை 12.10.2020 ஏறாவூர் நகர சபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

சபையின் சொந்த வருமானம் அத்துடன் அரச துறைகளுக்கூடாக கிடைகின்ற மானியங்கள் ஒதுக்கீடுகள் உள்ளடங்கலாக சுமார் 231 மில்லியன் ரூபாவுக்கான பாதீடு சபைத் தலைவரால் சமர்க்கப்பிக்கப்பட்டது.

இதில் நகர சபையின் சொந்த வருமானம் சுமார் 45 மில்லியன் 8 இலட்சமாகும்.

இந்தப் பாதீடு 2020 செப்ரெம்பெர் 30 வரையான தரவுகள் தகவல்களை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டது என நகர சபைச் செயலாளர் முஹம்மது றபீக் ஷியாவுல்ஹக் தெரிவித்தார்.

நண்பகலவில் பாதீட்டு வாசிப்பு முடிவடைந்ததும் சபையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டபொழுது அது ஏகமனதான பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்று பல அங்கத்தவர்கள் கோரி நின்றனர்.

இதன்போது பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது பத்திரத்தில் ஆதரவு ஆதரவின்மை நடுநிலைமை ஆகிய மூன்று தெரிவுகள் இடம்பெற்றிருந்தன.

அவ்வேளையில் அங்கத்தவர்களில் 12 பேர் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பாதீட்டுக்கு எதிராகவும் 4 பேர் ஆதரவாகவும் இருப்பதைத் தெரிவித்தனர்.

சபை வாக்கெடுப்பின்போது உள்ளுராட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளின் உள்ளுராட்சி உதவி ஆணையாளரால் அனுப்பப்பட்ட விசாரணை அதிகாரியான தயாபரன் சபையில் பிரசன்னமாகியிருந்தார்.

சபையின் வாக்கெடுப்பு முடிவடைந்து கூட்டம் நிறைவுற்றதின் பின்னர் பாதீடு தோற்கடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சபை அங்கத்தவர்களிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

சுதந்திர ஊடகவியலாளர்களும் இந்த விஷேட அமர்வுக்கும் பாதீடு சமர்ப்பிப்பு நிகழ்வுக்கும் அவதானிப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

2012ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உள்ளுர் அதிகார சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின்படி மீண்டுமொருமுறை இந்த பாதீட்டின் இரண்டாவது வாசிப்பை அடுத்து வரும் 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்க முடியும் என நகர சபைச் செயலாளரால் அறிவிக்கப்பட்டது.

ஏறாவூர் நகர சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, சுயேட்சை குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் முறையே 5 4 3 2 1 1 1 என்ற அடிப்படையில் ஆசனங்களைப் பெற்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment