புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்த பெண் கைதாகி பிணையில் விடுதலை - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்த பெண் கைதாகி பிணையில் விடுதலை

(எம்.எப்.எம்.பஸீர்) 

புத்த பெருமானின் உருவம் பொறித்த சேலையை அணிந்து, கொழும்பு - நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வந்த பெண் ஒருவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

62 வயதுடைய, உப்புக் குளம் வடக்கு, மன்னார் பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். 

பிரிதொருவருக்கு சிகிச்சைப் பெற்றுக் கொள்வதற்காக, மன்னாரில் இருந்து குறித்த பெண் நோயாளியை அழைத்து வந்துள்ளதாகவும், வைத்தியசாலையிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய அங்கு சென்ற நாரஹேன்பிட்டி பொலிஸார் அவரைக் கைது செய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் கடமை நேர தகவல் அதிகாரி கூறினார். 

மதம் ஒன்றினை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்ததாகவும், அவர் அணிந்திருந்த சேலையில் இரு புத்த பெருமானின் உருவங்கள் இருந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார். 

இந்நிலையில் நேற்று முன்தினமே அப்பெண்ணை கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியதாக கூறிய பொலிஸார், நீதிமன்றம் அப்பெண்ணை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவித்துள்ளது. மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad