தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவை சுகாதார அமைச்சு (line ministry) மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் திருமதி P.S.M சாள்ஸ் தலைமையில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று 25.09.2020 நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் புற்றுநோய் பிரிவு (cancer unit) தலைமைப் பணிப்பாளர், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், ஆளுநரின் செயலாளர், வட மாகாண பிரதம செயலாளர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை துறைசார் அதிகாரிகள் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலைத் துறைசார் வைத்திய நிபுணர்கள் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலில் புற்றுநோய் பிரிவு மற்றும் psychotic பிரிவை line ministry க்கு மாற்றுவது தொடர்பில் ஏற்படக்கூடிய சாதக, பாதக தன்மைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த ஆளுநர், இப்பிரிவுகள் தனியே செயற்பட்டு வருவதால் மத்திய அமைச்சிற்கு பாரிய நிதிச் செலவுகள் ஏற்படுகின்றது. வட மாகாணத்தை தவிர ஏனைய மாகாண வைத்தியசாலைகளில் பல்வேறுபட்ட நிதிப் பிரச்சனைகள் சுகாதார துறை தொடர்பில் ஏற்படுகின்றது. எனவே அனைவரும் குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் கருத்துக்களை மட்டும் செவிமடுக்காது நோயாளர்கள் தொடர்பில் அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமென வலியுறுத்தினார்.
மேலும் தெரிவிக்கையில் எந்த விதத்திலும் நோயாளர்கள் பாதிக்கப்படகூடாது, இது ஒவ்வொரு நோயாளரதும் உரிமையாகும். இதற்கு முன்னர் பல்வேறுபட்ட அரசியல் மற்றும் அமைச்சுக்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவித்த ஆளுநர், ஒவ்வொருவரும் நோயாளர் தொடர்பில் அர்ப்பணிப்புடனும் அவர்கள் நலன் தொடர்பில் கரிசனையுடனும் செயற்பட வேண்டிய முக்கியத்துவத்தை விளக்கினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுநர், நான் இந்த வட மாகாணம் தொடர்பாக ஆளுநர் என்ற நிலையில் இருந்து இந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கின்றது. தற்போது சுகாதார திணைக்களத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஏறத்தாள 10 பில்லியன் செலவு ஏற்ப்படுகின்றது. இந்நிலையிலும் அரசாங்கம் சுகாதாரத்துறை தொடர்பில் மிக கரிசனையுடன் செயற்பட்டு வருகிறது. இந்நிலைமையை கருத்தில்கொண்டு உரிய முதன்மைத் திட்டங்களை சமர்ப்பிக்கும்படியும், தொடர்ந்து நாம் அதனை அமைச்சரவையுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதாகவும் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வைத்திய உபகரண வசதிகள் காணப்படுகிறது. அவற்றை வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்தி நோயாளர்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை வழங்கப்பட வேண்டுமென தெரிவித்த ஆளுநர், வைத்திய பற்றாக்குறை, தாதியர் பற்றாக்குறை, என்பவற்றை தீர்க்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
மேலும் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் தற்போது வட மாகாணத்தில் பெருமளவு ஆலய திருவிழாக்கள் இடம்பெற்று வருகிறது, இங்கு எவ்விதமான COVID19 தடுப்பு அறிவித்தல்களும் பின்பற்றப்படுவதில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. எனவே ஆலய நிர்வாகம் மற்றும் தொடர்புடைய தரப்பினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி COVID 19 தடுப்பு முறைகள் தொடர்பில் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களம்
No comments:
Post a Comment