பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி 1000 வீடுகளை அமைக்கும் திட்டம் அடுத்த மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை ஒன்று நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம், நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அதிகார சபை ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள், அமைச்சின் செயலாளர், பிரதம அமைச்சரின் பெருந்தோட்டத்திற்கான இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பரத் அருள்சாமி மற்றும் அமைச்சின் அபிவிருத்தி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடல் தொடர்பாக இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கான பரத் அருள்சாமி எமது செய்தி பிரிவிற்கு தகவல் தருகையில், தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு உட்பட்டதாக சமகால அரசாங்கத்தினால் இந்த வீடமைப்பு வேலைத்திட்டம் முதல் கட்டமாக மத்திய மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக குறிப்பிட்டார்.
இந்த திட்டம் ஏனை பெருந்தொட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் வீடுகளை நிர்மாணிப்பதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னைய அசராங்க காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைப் போன்று அல்லாது தோட்ட தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும்.
நாட்டின் ஏனைய மக்களைப் போன்று பெருந்தோட்ட மக்களும் நவீன வீடமைப்பு வசதிகளுடன் வாழக்கூடியதாக இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது. வீடுகளை அமைப்பதற்கு தோட்ட நிர்வாகங்களிடம் இருந்து காணிகளை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களம்
No comments:
Post a Comment