இஸ்ரேலை அங்கீகரித்தது பஹ்ரைன் - தூதரக உறவுகளை தொடங்க ஒப்பந்தம் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 12, 2020

இஸ்ரேலை அங்கீகரித்தது பஹ்ரைன் - தூதரக உறவுகளை தொடங்க ஒப்பந்தம்

இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்கும் அரபு நாடுகள் வரிசையில் தற்போது பஹ்ரைன் இணைந்துள்ளது. தூதரக உறவுகளை மேற்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

மேற்கு ஆசியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கி உள்ளன. 

அரபு நாடுகளுடன் இதுவரை ஒட்டாமல் இருந்த இஸ்ரேல், இப்போது அரபு நாடுகளுடன் நெருங்கி வருகிறது. இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் அமெரிக்கா அறிவித்தது. 

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே முதல் முறையாக விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் இஸ்ரேல் விமானங்களை தங்கள் வான் எல்லைக்குள் அனுமதிக்க சவூதி அரேபியாவும், பஹ்ரைனும் சம்மதம் தெரிவித்தன.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பிறகு, இஸ்ரேலை அங்கீகரிக்கவும் உறவுகளை இயல்பாக்கவும் பஹ்ரைன் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. தூதரக உறவுகளை மேற்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று அறிவித்தார். 

அமெரிக்கா மீதான செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதலின் 19 ஆண்டுகள் நிறைவையொட்டி இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் மற்றும் பஹ்ரைன் மன்னருடன் பேசிய பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டார் டிரம்ப். இந்த உரையாடலுக்குப் பிறகு, மூன்று தலைவர்களும் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

பஹ்ரைன் - இஸ்ரேல் ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இன்று மற்றொரு வரலாற்று வெற்றி’ என்று ட்வீட் செய்துள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒப்பந்தம் மற்றும் முழு உறவு ஏற்படுவதை குறிக்கும் வகையில் ஒரு வாரம் கழித்து டிரம்ப் வெள்ளை மாளிகையில் ஒரு விழாவை ஏற்பாடு செய்ய உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பஹ்ரைனின் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பதுடன், இஸ்ரேல் பிரதமருடன் தனியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். 

இந்த ஒப்பந்தமானது, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் டிரம்பிற்கு கிடைத்த மற்றொரு இராஜதந்திர வெற்றியாக கருதப்படுகிறது. அத்துடன், இஸ்ரேல் ஆதரவு கிறிஸ்தவர்களிடையே ஆதரவை அதிகரிப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment