மலையக மக்கள் சகல உரிமைகளும் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும் : பாராளுமன்றத்தில் குரலெழுப்பினார் அதாஉல்லா - News View

About Us

About Us

Breaking

Saturday, September 12, 2020

மலையக மக்கள் சகல உரிமைகளும் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும் : பாராளுமன்றத்தில் குரலெழுப்பினார் அதாஉல்லா

நூருல் ஹுதா உமர்

சம்பளப் பிரச்சினை மட்டுமன்றி மலையக மக்களின் சகல உரிமைகளும் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டுமென்றும் அனைத்து சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும் போதுதான் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் . எல்லா சிறுபான்மை தலைவர்களும் காலத்துக்கு காலம் பேச்சு வார்த்தை மட்டும் நடத்திவிட்டு சென்றுவிடுகிறார்களே தவிர பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. நாம் அனைவரும் ஒரு புள்ளியில் இருந்து அதை தீர்த்து வைக்க வேண்டுமென தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் அனுதாப பிரேரணையில் உரையாற்றும் போதே தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் சிறுபான்மை மக்கள் என்ற வகையில் மலையக மக்களுடன் நாம் எப்போதும் துணையாக இருப்போம். அமரர்களான முன்னாள் அமைச்சர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் வழியில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் எப்போதும் நாம் இணைந்து செயற்படுவோம்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் நான் இறுதியாக கலந்துரையாடிய போது நாங்கள் இருவரும் நாடு தொடர்பிலும் சிறுபான்மை மக்கள் தொடர்பிலும் அதிகநேரம் கலந்துரையாடினோம். இவ்வளவு சீக்கிரம் அவர் எம்மை விட்டு பிரிந்து விடுவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. அந்த வகையில் நல்ல நண்பனை நல்ல சகோதரனை சிறந்ததொரு தலைவனை நாம் இழந்திருக்கின்றோம். அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் பல கூட்டங்களிலும் வெளிநாட்டுப் பயணங்களிலும் நாம் சந்தித்து பல்வேறு விடயங்களை கலந்துரையாடியதை நான் நினைத்துப் பார்க்கின்றேன். இப்போதும் அதை மறக்க முடியாதுள்ளது. தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடிய தலைவர் அவர்.

அதிலும் தாம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ம் அதற்கான போராட்டங்களை வெல்வதிலும் அவர் மிக கருத்தாக செயற்பட்டார். அவர் ஆரம்பித்த பணிகளை அவரது புதல்வர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றுவார். அவரது அனைத்து செயற்பாடுகளிலும் நாம் அவருடன் இணைந்து செயற்படுவோம்.

அமரர் தொண்டமானின் மனைவி,பிள்ளைகள் உறவினர்களுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment