பிரேமலால் ஜயசேகர எம்.பியாவதை எதிர்த்து சபையில் எதிரணி கடும் சர்ச்சை - கறுப்பு சால்வைகளை தூக்கியெறிந்து சபையிலிருந்து வெளியேற்றம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

பிரேமலால் ஜயசேகர எம்.பியாவதை எதிர்த்து சபையில் எதிரணி கடும் சர்ச்சை - கறுப்பு சால்வைகளை தூக்கியெறிந்து சபையிலிருந்து வெளியேற்றம்

பிரேமலால் ஜயசேகர நேற்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து எதிர்க்கட்சியினர் சபையில் பெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமைக்கு எதிராக கருப்பு சால்வையை அணிந்திருந்த எதிர்க்கட்சியினர் சபையில் பல்வேறு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

பிரேமலால் ஜயசேகர, சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபோது ‘சத்தியப்பிரமாணம் முறையற்றது அது அரசியலமைப்புக்கு முரணானது’ என குரலெழுப்பி அவர்கள் அதற்கு இடையூறு விளைவித்தனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவான பிரேமலால் ஜயசேகர நேற்று சபையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து எதிர்க்கட்சியினர் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

தொடர்ந்து சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத வகையில் அவர்கள் குரல் எழுப்பினர். இறுதியில் தாம் கழுத்தில் அணிந்திருந்த கருப்பு சால்வையை சபா பீடத்தின் மத்தியில் வீசி எறிந்து விட்டு அனைவரும் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

அதன்போது சபையில் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி கருத்து தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்ல, நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் பாராளுமன்றத்தில் எம்.பியாக சத்தியப்பிரமாணம் மேற்கொள்வது முறையற்றது என்றும் அது அரசியல் யாப்புக்கு முரணானது என்றும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது அவரை பாராளுமன்றத்திற்கு அழைப்பது தொடர்பில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்ட போது அப்போது ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அதற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.

அந்த வகையில் சரத் பொன்சேகாவுக்கு ஒரு சட்டமும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளியான பிரேமலால் ஜயசேகரவுக்கு இன்னொரு சட்டமுமா? என்ற தோரணையில் லக்ஷ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பினார். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அது தொடர்பான சரத்துக்களை ஆதாரமாகக் காட்டி லக்ஷ்மன் கிரியல்ல கருத்துக்களை முன்வைத்தார்.

எனினும் அதற்கு பதிலளித்த சபாநாயகர் அரசியலமைப்பின் சரத்துக்களை ஆதாரமாக காட்டி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கு முடியுமென்றும் அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட உறுப்பினருக்கு பாராளுமன்றத்தில் ஏனைய உறுப்பினர்களுக்குள்ள அனைத்து உரிமையும் காணப்படுவதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து மீண்டும் அரசியலமைப்பின் சரத்தை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்த ஹரின் பெர்னாண்டோ எம்.பி. சபாநாயகர் தெரிவித்த கூற்றுக்கு அடுத்தபடியாக அந்த சரத்தில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை சபை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து அதனை சபையில் வாசித்துக் காட்டினார்.

அதனையடுத்து குறிப்பிட்ட சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு பகிரங்கமாக அறிவித்து அதனையடுத்து தற்போது சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் அது தொடர்பில் ஒழுங்கு பிரச்சினை எழுப்புவதற்கு எவருக்கும் அனுமதி கிடையாது. சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் அவர் ஏனைய எம்பிக்களுக்கு சமமானவர். இதை உணராமல் சபையை அவமதிப்புக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் அவர் எதிர்க்கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார்.

அதன்போது எதிர்க்கட்சி எம்பியான சரத்பொன்சேகா அது தொடர்பில் கருத்து தெரிவித்த போது மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான ஒருவர் பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்ள முடியாது.

எனக்கும் அன்று காட்டு நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை தீர்மானிக்கப்பட்டு நானும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளேன். எனக்கு பெரும் அநீதி நடைபெற்றது.

எவ்வாறெனினும் நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள முடியாது.அந்த நீதிமன்ற தீர்ப்பிலுள்ள விடயத்தை சபாநாயகரும் சபையில் குறிப்பிட்டார் என சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து கருத்து தெரிவித்த ஹரின் பெர்னாண்டோ எம்.பி. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் வழங்குவது அரசியலமைப்புக்கு முரணானதென தெரிவித்து அரசியலமைப்பின் ஒரு சரத்தை சபையில் வாசித்துக் காட்டினார்.

பிரேமலால் ஜயசேகர விடயத்தில் இவ்வாறு செயற்பட முடியுமானால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளுக்கும் வாரம் ஒருமுறை வீட்டுக்கு சென்று வரலாம் என்ற அனுமதியை நீதிமன்றம் வழங்க முடியுமே என்றும் அவர் சபையில் கேள்வி எழுப்பினார்.

எவ்வாறாயினும் சில நிமிடங்கள் தொடர்ந்த சர்ச்சையின் பின்னர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியினர் கழுத்தில் அணிந்திருந்த கருப்பு சால்வையை கழற்றி சபா மண்டபத்தின் மத்தியில் எறிந்துவிட்டு சபையிலிருந்து வெளியேறி விட்டனர்.

அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்றன.

லோரன்ஸ் செல்வநாயகம், சம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment

Post Bottom Ad